சமீபத்தில் தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்கள் அதிகரித்துள்ளன. அதுவும் கொரனோ காலத்தில் பொது முடக்கத்தில் இருந்த போது, பொழுதுபோக்குக்காக விளையாட நினைத்த பலர், அதில் தீவிரமாக இறங்கி வெளிவர முடியாமல் தங்கள் பொன்னான நேரத்தையும், பணத்தையும் இழந்தது மட்டுமல்லாமல், கடன்பட்டு உயிரையும் மாய்துக் கொண்டனர்.
உயிரைக் குடிக்கும் ஆன்லைன் சூதாட்டங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக இருந்தது. நீதி மன்றங்களிலும் பல வழக்குகள் தொடரப்பட்டன.
இதையடுத்து, பணம் வைத்து ஆடும் ஆன்லைன் சூதாட்டங்களுக்குத் தடை விதிக்கவும், ஆன்லைன் சூதாட்டங்களை நடத்துவோரை கைது செய்யும் வகையிலும் சட்டத்தில் திருத்தம் செய்யப்படும் என முதலமைச்சர் கடந்த நவம்பர் மாதம் அறிவித்திருந்தார். தமிழக அரசு பிறப்பித்த அவசர சட்டத்திற்கு ஆளுநரும் ஒப்புதல் அளித்தார்.
இந்நிலையில், இன்று துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடைவிதிக்கும் சட்ட மசோதாவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.1930 ஆம் ஆண்டு தமிழ் நாடு சூதாட்டச் சட்டம்,1888 சென்னை நகர காவல் சட்டம் மற்றும் 1859 தமிழ்நாடு மாவட்ட காவல் சட்டம் ஆகியவற்றில் திருத்தம் செய்து 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு சூதாட்டம் மற்றும் காவல் சட்டங்கள் ( திருத்தச்) சட்டம் என தாக்கல் செய்யப்பட்டது.
இந்த சட்டத்தின் படி, தடையை மீறி ஆன்லைன் சூதாட்டங்களை விளையாடுபவர்களுக்கு, 5000 ரூபாய் அபராதமும், 6 மாத சிறை தண்டனையும் மட்டுமல்லாமல் அவர்கள் பயன்படுத்தும் கணினிகள் முதலிய உபகரணங்களையும் பறிமுதல் செய்ய முடியும். மேலும், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டை நடத்துபவர்களுக்கு 10000 ரூபாய் அபராதமும், 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்க முடியும்.