
ஆம்பூர்: தேனீக்கள் பொதுவாக அடர்ந்த மரங்கள் நிறைந்த பகுதி, உயர்ந்த கட்டிடங்கள் ஆகிய இடங்களில் கூடு கட்டுவது வழக்கம்.
இந்நிலையில், நேற்று திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பைபாஸ் சாலை அருகே சாமியார் மடம் சாலையில் இயங்கி வரும் தனியார் வங்கியின் ஊழியர் குணாநிதி வேலைக்கு வந்துள்ளார்.
தனது இருசக்கர வாகனத்தை வங்கி அருகே உள்ள ஒரு காலி இடத்தில் விட்டுவிட்டு பணிக்கு சென்றார். மதிய உணவிற்கு செல்ல பைக் அருகே சென்றபோது தேனீக்கள் அவரை சுற்றி வளைத்தது.
உடன் அங்கிருந்து ஓட்டம் பிடித்த அவர் தனது இரு சக்கர வாகனத்தை பார்த்தபோது அதில் சாவி போடும் இடத்திற்கு அருகில் தேனீக்கள் கூட்டமாக அமர்ந்து கூடுகட்ட முயன்றது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அங்கிருந்த சருகுகளை பற்ற வைத்து புகையை உருவாக்கிய பின்னர் தேனீக்கள் அங்கிருந்து கலைந்து சென்றன. இதைத்தொடர்ந்து குணாநிதி தனது இருசக்கர வாகனத்தை அங்கிருந்து எடுத்து சென்றார்.
பைக்கை நிறுத்திய சில மணிநேரங்களில் தேனீக்கள் கூடு கட்டியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.




