தனது குடும்பத்திலேயே ஐந்து உறுப்பினர்கள் இருந்தும் தான் போட்டியிட்ட வார்டில் ஒரே ஒரு ஓட்டு வாங்கி பாஜக வேட்பாளர் பரிதாபகரமான தோல்வியை சந்தித்துள்ளார்.
தமிழகத்தில் இரு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் கோவையில் கடந்த 9ஆம் தேதி உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம நகராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து இன்று வாக்கு எண்ணிக்கை பணிகள் காலை எட்டு மணி முதல் நடைபெற்று வருகின்றன. இதில் குருடம்பாளையம் ஒன்பதாவது வார்டு இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளது. இதில் திமுகவின் சார்பில் போட்டியிட்ட அருள்ராஜ் 387 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இந்நிலையில் இங்கு போட்டியிட்ட பாஜக வேட்பாளர் கார்த்திக் ஒரே ஒரு ஓட்டு வாங்கி பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டு படுதோல்வியை சந்தித்துள்ளார்.
ஒரு ஓட்டு வாங்கிய பாஜக வேட்பாளர் கார்த்திக் குடும்பத்தில் அவரது தாய், தந்தை, மனைவி, சகோதரர்கள் என மொத்தம் ஐந்து பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.