“ரம்ஜான், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைகளுக்கு மட்டுமே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்கள் சொல்லுவார். விநாயகர் சதுர்த்திக்கெல்லாம் சொல்ல மாட்டார்” என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி பேசியுள்ளார்.
தருமபுரி மாவட்டத்தில் பாஜக செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், “விவசாயிகள் உழைத்து உழைத்து தேய்ந்து வருகின்றனர். அவர்களின் வாழ்வில் ஒளியேற்றும் விதமாக புதிய வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதை எதிர்க்கும் தலைவர்கள் நேரடியாக யாரும் விவசாயத்தில் ஈடுபடுவதில்லை. அவர்களுக்கு விவசாயம் குறித்து தெரியாது என்பதாலேயே அவர்கள் இந்த சட்டங்களை எதிர்க்கின்றனர். இடைத்தரகர்களிடம் சிக்கி தவித்து வரும் விவசாயிகளை காப்பாற்றுவதற்கும், அவர்களை முன்னேற்றுவதற்கும்தான் புதிய வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்தவகையில் இது எந்த ஒரு விவசாயிக்கும் எதிரான சட்டம் இல்லை. பாஜக தொண்டர்கள் ஒவ்வொரு விவசாயிகளையும் சந்தித்து அவர்களுக்கு இச்சட்டத்தின் பயன்கள் குறித்து எடுத்துரைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
விநாயகர் சதுர்த்தியிலும் இந்த தமிழக அரசு அரசியல் செய்கிறது. ரம்ஜான், கிருஸ்துமஸ் பண்டிகைக்கு மட்டுமே முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்கள் சொல்லுவார். ஆனால் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்துக்கள் சொல்ல மாட்டார். ஆகவே வருகின்ற 10ம் தேதி நாம் அனைவரும் போஸ்ட் கார்டுகள் அனுப்பி முதலமைச்சர் ஸ்டாலினுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்து அனைவரும் போஸ்ட் கார்டு அனுப்ப வேண்டும்” என்றார். இக்கூட்டத்தில் பாஜக மாநில மாவட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.