சென்னையில் திருடனைப் பிடிக்க சென்று 2 வது மாடியில் இருந்து குதித்தவர் எழும்புமுறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை குமரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. பிளம்பர் வேலை செய்து வரும் இவர் 2 தளங்கள் கொண்ட வீட்டில் வாடகைக்கு வசித்து வருகிறார். இரவு நேரங்களில் இவர் மொட்டைமாடியில் உறங்குவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். நேற்றிரவு வழக்கம்போல உறங்கிக்கொண்டு இருந்த ராஜா, தனது வீட்டின் பீரோவை யாரோ திறப்பது போல் சத்தம் கேட்டதையடுத்து வீட்டில் வந்து பார்த்துள்ளார். அப்போது அங்கு ஒரு திருடன் பீரோவை திறந்து பொருட்களை எடுப்பது தெரியவந்தது. அதனை கண்டு அதிர்ச்சியடைந்த ராஜா, திருடனுடன் சண்டையிட்டுள்ளார்.
ஒரு கட்டத்தில் திருடன் 2 வது மாடியில் இருந்து குதிக்கவே, திருடனை பிடிக்கும் வேகத்தில் ராஜாவும் குதித்துள்ளார். இதனால் ராஜாவின் இடுப்பு எலும்பு முறிந்தது. ஆனால் திருடன் தப்பி ஓடி விட்டார். தகவலறிந்த குமரன் நகர் காவல்துறையினர் ராஜாவை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேல் சிகிச்சைக்காக தற்போது ராஜீவகாந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.