
ஐதராபாத்தில் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார். அதில் அவர் பேசியதாவது:-
தற்போது,தீவிரமாக பரவி வரும் கொரோனா நோய்க்கு தடுப்பூசி உருவாக்குவதில்தான் உலகம் முழுவதும் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. விரைவாக இயல்புநிலை திரும்ப இது அவசியம். தடுப்பூசி உருவாக்கும் சர்வதேச முயற்சிகளின் மையப்புள்ளியில் இந்தியா இருக்கின்றது.
விலை குறைவான தடுப்பூசி அனைவருக்கும் கிடைக்க இந்தியா உதவும் என்று ஐ.நா. சபையிடம் பிரதமர் மோடி ஏற்கனவே உறுதி அளித்துள்ளார்.

எனவே பல நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகளுடன் நான் பேச்சுவார்த்தை நடத்துவதை வைத்து பார்த்தால், உலகமே விலை குறைந்த, நம்பகமான கொரோனா தடுப்பூசிக்கு இந்தியாவைத்தான் எதிர்பார்த்து காத்திருக்கின்றது.
ஹைட்ராக்சிகுளோரோகுயின், பாராசிட்டமால் போன்ற மருந்துகளின் தேவை அதிகரித்துள்ளது. அதனால், அந்த மருந்துகளின் உற்பத்தியை தீவிரப்படுத்தி, 150 நாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளோம் என்றார் இவற்றில் பாதிக்கு மேற்பட்ட நாடுகளுக்கு சொந்த செலவில் கொடுத்துள்ளோம்.
கொரோனா நமக்கு பல பாடங்களை கற்றுத்தந்துள்ளது என்று கூறிய அவர் பொருளாதார மீட்பு நடவடிக்கையில்தான் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் எனவும் கடந்த செப்டம்பர், அக்டோபர் மாத பொருளாதார வளர்ச்சி புள்ளிவிவரங்கள் ஊக்கம் அளிப்பதாக உள்ளன எனவும் இதை பயன்படுத்தி, உற்பத்திக்கு உகந்த சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று அவர் பேசினார்.




