சென்னையில் இதுவரை 5 லட்சத்து 49 ஆயிரத்து 270 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் இவர்களில் 8 ஆயிரத்து 467 பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

5 லட்சத்து 38 ஆயிரத்து 745 பேர் குணமடைந்து விட்ட நிலையில் 2 ஆயிரத்து 58 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இரண்டு ஆண்டுகளாகியும் தமிழகத்தில் கொரோனா தொற்று இன்னும் முழுமையாக கட்டுப்படுத்தப்படவில்லை. கடந்த ஒரு மாதமாக தினசரி பாதிப்பு ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. சென்னையில் 180 முதல் 220 வரை தினசரி பாதிப்பு பதிவாகிறது. தற்போது சென்னையில் 110 தெருக்கள் கட்டுப்பாட்டு பகுதியாக உள்ளன.
கொரோனா பாதித்த பலர் வீட்டு தனிமையில் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் இருப்பதால் ஒரே வீட்டில் நான்கைந்து பேர் தொற்றுக்கு ஆளாகிறார்கள். மேலும் கொரோனா தொற்று இருந்தும் வெளியே சுற்றித்திரிவதால் மற்றவர்களுக்கும் பரவுகிறது. எனவே கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக சுகாதார அலுவலர்களுடன் ஆலோசனை நடத்திய கமிஷனர் ககன்தீப்சிங் பேடி புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
அதன்படி கொரோனா பாதித்தவர்களை வீட்டில் தனிமைப்படுத்தக் கூடாது. உடனே மருத்துவமனைகளில் சேர வேண்டும். 14 நாட்கள் வரை ஆஸ்பத்திரியில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்க வேண்டும். கட்டாயம் வீட்டு தனிமைதான் வேண்டும் என்பவர்களின் வீடுகளை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்வார்கள். தனியறை, கழிப்பறை போன்ற கட்டமைப்பு வசதிகளை நேரில் பார்த்து பின்னர் அனுமதி வழங்குவது பற்றி முடிவு செய்வார்கள்.
அவ்வாறு தனிமைப்படுத்தப்படுபவர்கள் வெளியில் நடமாடுவது கண்டுபிடிக்கப்பட்டால் உடனடியாக வீட்டு தனிமை ரத்து செய்யப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.




