புதுச்சேரியில் குடிபோதையில் உணவக ஊழியர்களிடம் ரகளையில் ஈடுபட்ட யூடியூப் புகழ் வில்லேஜ் குக்கிங் டாடி ஆறுமுகத்தின் மகன் உள்பட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
முத்தியால்பேட்டையில் உள்ள உணவகத்திற்கு, பிரபல யூடியூப் சேனலைச் சேர்ந்த டாடி ஆறுமுகத்தின மகன் கோபிநாத் மற்றும் அவரது நண்பர்களான ஜெயராம், தாமு ஆகிய 3 பேர் சென்றுள்ளனர். அங்குள்ள பப்பில் மது அருந்திவிட்டு, அங்கிருந்த ஊழியர்களை ஆபாசமான வார்த்தைகளால் திட்டிக் கொண்டே இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், இரவு 11 மணியான பிறகும் ஊழியர்களை மது கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். ஆனால், பப் மூடப்பட்டதால், அவர்கள் மது வழங்க மறுத்துள்ளனர்.
இதனால், கோபமடைந்த கோபிநாத், எனக்கே மது கொடுக்க மாட்டாயா..? என்றுக் கூறி விட்டு, அங்கிருந்த பொருட்களை அடித்து ஹோட்டலை நாசப்படுத்தியுள்ளார். அதோடு, போதையிலிருந்த நண்பர்கள் மூவரும் அங்கிருந்த ஊழியர்களுடன் ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஓட்டல் ஊழியர்கள் முத்தியால்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கோபிநாத் உள்ளிட்ட 3 பேரிடமும் விசாரணை நடத்தினர். அப்போது போலீஸாரிடமும் கோபிநாத் வாக்குவாதம் செய்துள்ளார். இதுகுறித்து பதிவு செய்யப்பட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
கோபிநாத் உள்பட 3 பேரையும் எச்சரித்த போலீசார், அவர்களை காவல்நிலையத்திற்கு வரச் சொல்லிவிட்டு, அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். ஆனால், அவர்கள் காவல்நிலையம் வராததால், ஓட்டல் ஊழியர் அளித்த புகாரின் அடிப்படையில், டாடி ஆறுமுகத்தின் மகன் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
யூடியூப் சேனல் மூலம் பிரபலமாகி, லட்சங்களில் பணம் சம்பாதித்த டாடி ஆறுமுகம், மதுரை மற்றும் புதுச்சேரியில் ஓட்டல்களை நடத்தி வருகிறார். புதுச்சேரியில் மட்டும் 3 ஓட்டல்கள் அவருக்கு சொந்தமாக உள்ளன. அதனைத்தான் கோபிநாத் கவனித்து வருவது குறிப்பிடத்தக்கது.