இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் சூழலில், தமிழகத்தில் கடந்த சில தினங்களாக ரூ.100-ஐ கடந்து விற்பனையாகி அதிர்ச்சியளிக்கிறது.
இதனால் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் உள்ளது. இதனால் சாமானிய மக்கள் பெரும் துயரத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
தேனி மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெட்ரோல் விலை ரூ.100-ஐ எட்டியதை தொடர்ந்து, இன்று டீசலின், விலையும் நூறு ரூபாயை கடந்து 100ரூபாய் 5பைசாவாக விற்பனையாகிறது.
இந்நிலையில் டீசல் விலை உயர்வால் ஏற்பட்ட மன வேதனையை பெரியகுளம் பகுதியில் உள்ள லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கேக் வெட்டி நூதனமாக வேதனையுடன் கொண்டாடினர். இதற்காக பெரியகுளம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் பங்க் முன்பாக ஒருங்கிணைந்த லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர், கேக் வெட்டி ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர்.
மேலும் அங்கிருந்த பணியாளர்கள், பெட்ரோல், டீசல் நிரப்ப வரும் வாகன ஓட்டிகளுக்கும் கேக் வழங்கி தங்கள் மன வேதனையை லாரி உரிமையாளர்கள் வெளிப்படுத்தினர்.
இது குறித்து லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கூறுகையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க கூறியும், அதனை ஜி.எஸ்.டி வரிவிதிப்புக்குள் கொண்டுவர கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தியும் அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தற்போது 100 ரூபாய்க்கு மேல் டீசல் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள மன வேதனையை கேக் வெட்டி மகிழ்சியுடன் கொண்டாடினாலாவது மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்கும் நடவடிக்கையை எடுப்பார்கள் என்று நம்பி நூதன முறையில் இந்த விலை உயர்வை வருத்தத்துடன் செய்து வருவதாக விளக்கம் அளித்துள்ளனர்.