புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக தி.மு.க. தனது சட்டப்போராட்டத்தை மேற்கொள்ளும் என்று தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கும் வகையில் காஷ்மீர் முதல் கடைக்கோடித் தமிழகம் வரை கைது நடவடிக்கைகள் – தேசிய பாதுகாப்பு சட்டம் – குண்டர் சட்டப் பாய்ச்சல்கள் – சிறை வைப்பு உள்ளிட்டவை தொடர்ந்து கொண்டிருக்கிறது. தி.மு.க.வை இத்தகைய பூச்சாண்டித்தனங்களால் எவராலும் எதுவும் செய்து விட முடியாது. எந்தமிழ் மக்களையும் திசை திருப்பிவிட முடியாது.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இருக்கின்றது என்கிற ஒரே காரணத்திற்காக, மதச்சார்பின்மைக்கு எதிராக-இந்தியாவின் பன்முகத்தன்மையைச் சிதைத்திடும் நோக்கத்துடன் மத்தியிலே உள்ள ஆட்சியின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. அகில இந்திய மருத்துவ இடங்களில் இடஒதுக்கீடு முறையைப் பின்பற்ற எந்தத் தடையும் இல்லை’ என்கிற அழுத்தமான தீர்ப்பினை வழங்கி, ‘மூன்று மாதங்களுக்குள் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான முடிவுகளை எடுக்கவேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசு மேல்முறையீடு என்கிற சுற்றி வளைக்கும் சட்டவழியைக் கையாளுமானால் அதனையும் எதிர்கொள்வதற்கு உச்சநீதிமன்றத்தில் ‘கேவியட்’ மனுவைத் தி.மு.க. தாக்கல் செய்துள்ளது. எனவே, மத்திய அரசின் தொகுப்பில் உள்ள மருத்துவ இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 50% இடங்கள் தொடர்பான வழக்கில் கழகம் பெற்றுள்ள வெற்றியை மக்களிடம் எடுத்துரைத்து, சமூக நீதியில் தமிழகம் எப்போதும் ஒன்றிணைந்து நிற்கும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டிய பொறுப்பு கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவருக்கும் உள்ளது.
நீட் எனும் கொடுவாள் தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைத்தது. அகில இந்திய மருத்துவ இடங்களுக்கான தொகுப்பு வாயிலாக, சமூகநீதி சிதைக்கப்பட்டது. இப்போது புதிய கல்விக் கொள்கை, மும்மொழித் திட்டம் என்ற பெயரால் இந்தியாவில் உள்ள பிறமொழிகள் – பிற தேசிய இனங்கள் – பண்பாட்டுக் கலாச்சார விழுமியங்கள் அனைத்தையும் சிதைக்கும் பேராபத்தை உருவாக்கியிருக்கிறார்கள். தி.மு.க. மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்காத பிற மாநில முதல்வர்கள், அகில இந்திய அரசியல் கட்சித் தலைவர்கள் ஆகியோருடன் தொடர்பு கொண்டு, இந்திய மாணவர்களின் எதிர்கால நலன் காக்கும் ஒருங்கிணைப்பு முயற்சிகளையும், அதற்கான சட்டப் போராட்டங்களையும் தொடர்ந்து மேற்கொள்ளும் என்று தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.