இயக்குநர் மணிரத்னத்தால் தனது கனவு நனவானது என்று இயக்குநர் கார்த்திக் நரேன் தெரிவித்துள்ளார்.
கரோனா அச்சுறுத்தலால் திரையுலகில் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்புக்கு உதவுவதற்காக ‘நவரசா’ ஆந்தாலஜி தயாராகி வருகிறது. இதில் அனைவருமே சம்பளமின்றிப் பணிபுரிந்து வருகிறார்கள்.
மணிரத்னம் மற்றும் ஜெயந்திரா தயாரித்து வரும் இந்த ஆந்தாலஜி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
‘நவரசா’ ஆந்தாலஜியில் 9 கதைகளை கே.வி.ஆனந்த், கெளதம் மேனன், பிஜாய் நம்பியார், கார்த்திக் சுப்புராஜ், ஹலிதா ஷமீம், பொன்ராம், கார்த்திக் நரேன், ரதிந்தீரன், அரவிந்த்சாமி ஆகிய 9 இயக்குநர்கள் இயக்கவுள்ளார்கள் என அறிவிக்கப்பட்டது.
இதில் சில இயக்குநர்கள் விலகவே, சிலர் இணைந்துள்ளார்கள். ஹலிதா ஷமீம், பொன்ராம் ஆகியோருக்கு பதிலாக ப்ரியதர்ஷன், வஸந்த் ஆகியோர் இணைந்துள்ளனர்.
இதில் பல இயக்குநர்கள் தங்களுடைய படங்களின் பணிகளை முடித்துக் கொடுத்துவிட்டார்கள். ‘நவரசா’ ஆந்தாலஜியில் சயின்ஸ் ஃபிக்ஷன் கதையொன்றை இயக்கியுள்ளார் கார்த்திக் நரேன்.
இதில் அரவிந்த்சாமி பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சமீபத்தில் 2021-ம் ஆண்டின் தங்களுடைய வெளியீட்டுத் திட்டங்கள் குறித்து ஃநெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளம் வீடியோ பதிவொன்றை வெளியிட்டது.
இதில் ‘நவரசா’ ஆந்தாலஜியிலிருந்து சில காட்சிகள் இடம்பிடித்தன. சூர்யா, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, சித்தார்த், ரேவதி உள்ளிட்ட பலருடைய புகைப்படங்களும் இணையத்தில் ட்ரெண்டாகின.
இதில் அரவிந்த்சாமி புகைப்படங்களை வைத்து கார்த்திக் நரேன் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“நவரசா, ஒரே நேரத்தில் பதற்றமும், ஆர்வமும் தொற்றிக் கொள்கிறது. இது நீண்ட காலமாக இந்தக் கதையை எடுக்க வேண்டுமென்ற கனவு இருந்தது.
(கலப்படம் இல்லாத ஒரு அறிவியல் புனைவுக் கதை) மணிரத்னம் இல்லையென்றால் இந்தக் கதை கண்டிப்பாகத் திரைக்கு வந்திருக்காது. நீங்கள் எல்லோரும் எப்போது பார்ப்பீர்கள் என்று காத்திருக்கிறேன். நெட்ஃபிளிக்ஸில், விரைவில் வெளியாகும்”.