தமிழகத்திற்குள் மாவட்டங்கள் இடையே பயணிக்க இ-பாஸ் தேவை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் ஆந்திரா, கேரளா, கர்நாடகா போன்ற பல மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வருபவர்கள் கட்டாயம் இ-பாஸ் வாங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அலுவலகப் பணி, தொழில், மருத்துவம் உள்ளிட்ட காரணங்கள் தெரிவித்தாலும் இ-பாஸ் இல்லாதவர்களை அனுமதிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இ-பாஸ் இல்லாமல் வருபவர்களை திருப்பி அனுப்புமாறும் அதிகாரிகள் உத்தவிட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு போலத்தான் இப்போதும் இ-பாஸ் எடுக்கும் முறை இருக்கிறது. அதன்படி https://eregister.tnega.org/#/user/pass வலைத்தளம் மூலம் தான் இ-பாஸ் வாங்க முடியும். இந்த வலைத்தளத்தில் உங்களது கைப்பேசி எண்ணை பதிவு செய்தால் ஓ.டி.பி எண் வரும், அதை வைத்து உள்ளே நுழைந்து தேவையான தகவல்களை கொடுக்க வேண்டும். குறிப்பாக தனிநபர் அல்லது குழுவாக சாலை வழிப்பயணம் செய்ய வேண்டும் என்றால் அதற்கு ஒரு தனி விருப்பம் உள்ளது. பின்பு ரயில் அல்லது விமானம் போன்றவற்றின் மூலமாக தமிழகம் வருவதாக இருந்தால் அதற்கும் ஒரு விருப்பம் உள்ளது. உங்களுக்கு தேவையானதை தேர்வு செய்து அதற்கு தகுந்த தகவல்களை கொடுக்க வேண்டும்.
ஒருவேளை அந்த வலைத்தளத்தில் நீங்கள் சாலை வழிப்பயணம் விருப்பத்தை தேர்வு செய்தால் மருத்துவ அவசரம், இறப்பு, அரசு டெண்டர் விவகாரம், திருமணம், சொத்து பதிவு, சுற்றுலா, அரசுப் பணிகளை மேற்பார்வை செய்தல், உள்ளிட்ட பணி நிமித்தமாக வருதல் போன்ற காரணங்கள் அதில் இருக்கும். எனவே இந்த காரணங்களை கொண்டு வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வர முடியும்.
இதில் எதுவும் இல்லையென்றாலும் கூட பிற காரணங்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கும், அதை கிளிக் செய்ய வேண்டும். மேலும் இந்த வலைத்தளத்தில் ரேஷன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், பான் கார்டு, பாஸ்போர்ட் உள்ளிட்ட எதாவது ஒன்றை கொடுத்து உங்களது அடையாள சான்று சமர்பிக்கலாம். அதேபோல் எந்த மாதிரி வாகனம், வாகனத்தின் பதிவு எண் போன்றவற்றையும் அதில் தெரிவிக்க வேண்டும்.