புதுச்சேரியில் மின் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக ஆண்டுதோறும் இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் சார்பாக கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்படும். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான கூட்டத்தில் 2023- 2024 ஆம் நிதியாண்டில் மின்கட்டணம் உயர்த்தப்படும் என கூறப்பட்டது. இது குறித்து பல எதிர்ப்புகள் வந்தாலும் கட்டண உயர்வு தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் மின் கட்டணம் யூனிட்டுக்கு 40 பைசா முதல் 45 பைசா வரை உயர்த்தப்பட்டு இருப்பதாக மின் துறை அறிவித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து வீட்டு உபயோகம் மின்சார கட்டணம் முதல் 100 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.1.90 வசூலிக்கப்படுகிறது. இதனை ரூ.2.30 ஆக உயர்த்த இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும் 101 முதல் 200 யூனிட் வரை யூனிட்டுக்கு தற்போது ரூ.2.90 வசூலிக்கப்படுகிறது. இதனை ரூ.3.30 ஆகவும் 201 முதல் 300 யூனிட் வரை யூனிட் ஒன்றுக்கு ரூ.5 கட்டணம், ரூ.5.45 ஆகவும் உயர்த்தப்பட இருக்கிறது. அதேபோல் 300 யூனிட்டுக்கு மேல் யூனிட்டுக்கு ரூ.6.45 வசூலிப்பதை ரூ.6.85 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.