சூயஸ் கால்வாயில் சி க்கியிருந்த பிரமாண்ட சரக்கு கப்பல் “எவர் கிவன்” இன்று அதிகாலை மீட்கப்பட்டு மிதக்கும் நிலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
உலகின் 12% சரக்கு போக்குவரத்து நடைபெறும் பகுதி சூயஸ் கால்வாய் ஆகும்.
கடந்த செவ்வாய்க்கிழமை, அதாவது, மார்ச் 23ஆம் தேதி முதல் “எவர் கிவன்” கப்பல் சூயஸ் கால்வாய் சகதியில் சிக்கி குறுக்கும் மறுக்குமாக நின்று போனது.
இதன் காரணமாக அங்கு பெரும் டிராபிக் ஜாம் ஆகி விட்டது. 450க்கும் மேற்பட்ட சரக்கு கப்பல்கள் செல்ல முடியாமல் தேங்கி விட்டன.
இந்த நிலையில் இன்று அதிகாலை இந்த கப்பல் மிதக்கும் நிலைக்கு கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகிறது. மீட்பு படகுகள் தொடர்ந்து முயற்சி செய்தாலும் சில வாரங்கள் பிடிக்கும் என்று கூறப்பட்ட நிலையில் இன்று அந்தக் கப்பல் சகதியில் இருந்து வெளியே வருவதற்கு இயற்கை ஒரு வகையில் உதவி செய்துள்ளது என்று சொல்லலாம்.
பௌர்ணமி காலம் என்பதால் கடலில் அலைகள் அதிகமாக இருந்தன. இதனால் கப்பல் சகதியில் இருந்து மீண்டு வெளியே வந்து உள்ளது என்கிறார்கள் கடல் சார் நிபுணர்கள்.
உலகின் பல பகுதிகளிலும் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் செய்யும் அளவுக்கு தாக்கம் ஏற்படுத்தக் கூடிய சூயஸ் கால்வாய் ட்ராஃபிக் ஜாம் சரியாகுவது எப்போது என்று காத்திருந்த கண்களுக்கு இப்போது விருந்து தயாராகியுள்ளது. ஆமாம், மீட்கப்பட்ட கப்பல் இப்போது எந்த நிலைமையில் இருக்கிறது என்பது பற்றிய வீடியோ வெளியாகியுள்ளது.