வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவாதிக்க முதல்வருக்கு அழைப்பு விடுத்துள்ளார் விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் 15 நாட்களுக்கும் மேலாக டெல்லியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வேளாண் சட்டங்களில் திருத்தங்கள் மேற்கோள்வதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
ஆனாலும் வேளாண் சட்டங்களால் பாதிப்பில்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து கூறி வருகிறார். திருவாரூரில் நேற்று பேட்டியளித்த முதல்வர், விவசாயிகளுக்கு பயனளிக்கும் சட்டம் என்ற காரணத்தினால் நாங்கள் வரவேற்கிறோம் என்றார். விவசாயியாக இருப்பதால்தான் ஆதரிக்கின்றேன் எனக் கூறிய முதல்வர், சட்டத்தின் என்ன தவறு இருக்கிறது என்ற கேள்வியையும் முன்வைத்தார்.
இந்த நிலையில் வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவாதிக்க முதல்வருக்கு விவசாய சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. திருவாரூரில் இன்று பேட்டியளித்த தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன், மத்திய அரசே வேளாண் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள ஒப்புக்கொண்ட நிலையில், மீண்டும் மீண்டும் வேளாண் சட்டங்களுக்கு வக்காலத்து வாங்கி முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார் எனச் சாடினார்.

பிரதமருக்கே அந்த சட்டங்கள் பற்றி தெளிவில்லாத போது சம்பந்தமே இல்லாமல் வேளாண் சட்டங்களை முதல்வர் ஆதரிப்பது விவசாயிகளுக்கு வேதனையளிப்பதாக இருக்கிறது எனக் கூறிய அவர், “விவசாயியான முதல்வருடன் வேளாண் சட்டங்கள் குறித்து எந்த மேடையிலும் விவாதிப்பதற்கு நான் தயாராக இருக்கிறேன். தலைமைச் செயலகத்தின் உயர் அதிகாரிகள் முன்னிலையிலோ அல்லது அவர் விரும்பும் எந்த பொது மேடையிலேயோ விவாதிக்கத் தயாராகவே இருக்கிறேன். இதுகுறித்து முதல்வர் அறிவிக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.




