நாடு முழுவதும் வருகின்ற 14-ந் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது இந்த நிலையில், அனைவரும் சொந்த ஊர் சென்று பண்டிகையை கொண்டாட ஆர்வமாக உள்ளனர். இதனால் கொரோனா ஊரடங்கு காலத்திலும், பொதுமக்கள் வெளிமாவட்ட மற்றும் மாநிலங்களில் உள்ள தங்களது சொந்த ஊருக்கு செல்ல பஸ், ரெயிலில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முண்டியடித்தனர்.
பஸ், ரெயிலில் டிக்கெட் கிடைக்காத பலர் கடைசி நேரத்தில் விமானங்களில் சென்று குடும்பத்தினருடன் பண்டிகையை கொண்டாட தயாராகி கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்தில் விமான சேவைகள் அதிகரிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கிற்கு பின்பு கடந்த மே 25-ந் தேதியில் இருந்து உள்நாட்டு விமான சேவைகள் தொடங்கியது முதல் இதுவரை அதிகபட்சமாக நாள் ஒன்றுக்கு 180 உள்நாட்டு விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தன.
தற்போது தீபாவளி பண்டிகை காரணமாக பயணிகள் வரத்து அதிகமானதால் நேற்று முதல் 200 விமான சேவைகள் அதிகரிக்கப்பட்டு இயக்கப்படுகின்றன.
மேலும் தற்போது அது 240 ஆக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தீபாவளி நெருங்குவதையொட்டி, முந்தைய நாட்களான குறிப்பாக வரும் 13-ந் தேதி வரை பயண டிக்கெட்களின் கட்டணங்கள் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து மதுரை செல்ல வழக்கமாக ரூ.3,500 இருந்த கட்டணம் தற்போது ரூ.6 ஆயிரத்தையும் கடந்துள்ளது. அதுவே உயர் வகுப்பாக இருந்தால் கட்டணம் ரூ.20 ஆயிரமாக அதிகரித்துள்ளது. தூத்துக்குடிக்கு சாதாரண நாட்களில் ரூ.3 ஆயிரமாக டிக்கெட் கட்டணம் இருக்கும். ஆனால் தற்போது ரூ.5 ஆயிரத்திலிருந்து ரூ.7 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது. அதே போல் டெல்லி, மும்பை, கொல்கத்தா, பாட்னா, மும்பை, ஐதராபாத் ஆகிய வழித்தடங்களிலும் விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகின்றது.
தீபாவளிக்கு முந்தைய தினமான 13-ந் தேதி வரைதான் இந்த கூடுதல் கட்டணம் இணையதளத்தில் காட்டுகிறது. தீபாவளி தினமான 14-ந் தேதியில் இருந்து மீண்டும் பழைய குறைந்த கட்டணமே இணையதளத்தில் காட்டுகின்றது.இந்த திடீா் கட்டண உயர்வால் தீபாவளி கொண்டாட விமானத்தில் சொந்த ஊர் செல்ல இருந்த பயணிகள் மிகவும் கவலையடைந்து உள்ளனர்.