காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் சார்பில் புதிர் போட்டி ஒன்று நடைபெற இருக்கின்றது.
இதுகுறித்து மாநில அரசுகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருக்கிறது. இந்த சுற்றறிக்கையை தமிழக அரசு, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:-
காந்தி ஜெயந்தியையொட்டி பள்ளி மாணவர்களை ‘ஆன்-லைன்’ புதிர் போட்டியில் கலந்துகொள்ள அறிவுறுத்துமாறு அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களையும் அறிவுறுத்த வேண்டும். இந்த போட்டி காந்தி ஜெயந்தியான இன்று அக்டோபர் 2 காலை 10 மணிக்கு தொடங்கி நவம்பர் 1-ந்தேதி இரவு 12 மணி வரை நடக்கிறது. 3 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களும் இதில் கலந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலம் மற்றும் இந்தியில் புதிர் போட்டி நடக்கிறது. காந்திகளின் வாழ்க்கை வரலாறு, காந்தியடிகளின் மக்கள் பணிகள், வாழ்க்கையோடு இணைந்த காந்தியடிகளின் கருத்துருக்கள் ஆகிய தலைப்புகளில் இந்த போட்டி நடைபெறுகின்றது.
காந்தி பிறந்தநாளையொட்டி புதிர் போட்டிகள் நடப்பது நல்ல விஷயம் என்றாலும் போட்டி நடைபெறும் மொழிகளில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டது அதிர்ச்சி அளிக்கின்றது என்று கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கல்வியாளர்கள் கூறுகையில், ‘தமிழகத்தில் தமிழ் மொழியில் இந்த புதிர் போட்டி நடத்தப்படாதது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த சுற்றறிக்கையை தமிழக அரசு புறக்கணித்திருக்க வேண்டும். ஆங்கிலம் மற்றும் இந்தி தெரியாத தமிழக மாணவர்கள் எப்படி இந்த தேர்வை எழுதுவார்கள்? இது ஒரு தவறான நடவடிக்கை’ என்று கூறினர்.