அரசு ஊழியர்கள் மகாராஷ்டிராவில் குதிரையில் வேலைக்கு செல்ல அனுமதி கோரி விண்ணப்பக்கடிதம் அளித்துள்ளனர்.
கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக பொது போக்குவரத்து பாதுகாப்பற்றதாக இருப்பதால், பலர் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் போன்ற தனிப்பட்ட வாகனங்களை தேர்ந்தெடுத்து பயணித்து வருகின்றனர். ஆனால் இவற்றை வாங்க முடியாதவர்கள் வேறு வழியின்றி பொது போக்குவரத்து வாகனங்களில் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்த சூழலில் மகாராஷ்டிராவில் நடைபெற்ற ஒரு சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மகாராஷ்டிராவில் உள்ள நந்தேத் நகரத்தைச் சேர்ந்த ஒரு அரசு ஊழியர், தினமும் குதிரையில் வேலைக்கு செல்ல தனது முதலாளியிடம் அனுமதி கேட்டுள்ள சம்பவம் ட்ரெண்டிங்காக இருந்து வருகிறது.
சதீஷ் பஞ்சாப்ராவ் தேஷ்முக் என்பவர் நாந்தேட் கலெக்டரேட்டில் உள்ள வேலைவாய்ப்பு துறையில் உதவி கணக்கு அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் குதிரையில் தினமும் வேலைக்கு வர அனுமதி கோரி கலெக்டர் அலுவலகத்திற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் தேஷ்முக், நான் முதுகுவலியால் அவதிப்பட்டு வருகிறேன். ஒவ்வொரு நாளும் சரியான நேரத்தில் அலுவலகத்தை அடைய பொது போக்குவரத்தில் வர இயலவில்லை.
இதுவரை பைக்கில் வந்த நிலையில், தற்போது உடல்நிலை காரணமாக, பைக் ஓட்டுவது மிகவும் வேதனையாக இருக்கிறது. என்னால் கார் வாங்க முடியவில்லை, அதற்கு பதிலாக குதிரையை வாங்க அனுமதி தருமாறு கோரிக்கை வைத்துள்ளார். தேஷ்முக் தனது கடிதத்தில் ஒவ்வொரு நாளும் குதிரையில் அலுவலகத்திற்கு வருவதற்கு அனுமதி கோரியது மட்டுமல்லாமல், அலுவலக வளாகத்திற்குள் குதிரையை நிறுத்தவும் அனுமதி கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த கடிதமானது தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.