மத்திய டெலிகாம் அமைச்சகம், ஜூலை இறுதி வரையில் ஒட்டுமொத்த ஐடி துறையின் ஊழியர்களும் வீட்டில் இருந்து வேலை செய்ய (Work From Home) அனுமதி கொடுத்த நிலையில், மேலும் டிசம்பர் 31ந் தேதி வரை நீட்டித்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு நாட்டில் மார்ச் மாதம் ஏற்படத் தொடங்கியபோது, ஐ.டி. நிறுவனங்கள், பிபிஓ நிறுவனங்கள், கால்சென்டர் போன்றவற்றில் பணியாற்றும் ஊழியர்கள் ஏப்ரல் 30-ம் தேதி வரை வீட்டிலிருந்தே பணியாற்றலாம் என்று மத்திய தொலைத்தொடர்புத் துறை விதிமுறைகளை வகுத்து வெளியிட்டது.
ஆனால், கொரோனா வைரஸ் பரவல் ஏப்ரல் மாதத்துக்குப் பின் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, அந்த விதிமுறைகளை தொலைத்தொடர்புத் துறை அமைச்சகம் ஜூலை 31-ம் தேதிவரை நீட்டித்தது.
இந்நிலையில் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சகம் ட்விட்டரில் பதிவிட்ட அறிவிப்பில், “கொரோனா வைரஸ் பரவல் சூழலைக் கருத்தில்கொண்டு, ஐ.டி. நிறுவனங்கள், பிபிஓ நிறுவனங்கள், சேவைத்துறையில் உள்ள நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற வகுத்த விதிமுறைகள், வழிகாட்டல்கள் டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஐடி மற்றும் அதைச் சார்ந்துள்ள நிறுவன ஊழியர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
தற்போது ஐ.டி., பிபிஓ நிறுவனங்களில் 85 சதவீதப் பணியாளர்கள் வீட்டிலிருந்துதான் பணியாற்றி வருகின்றனர். இதில் பெரும்பாலானவர்கள் சொந்த ஊரில் இருந்து வேலை பார்த்து வருகின்றனர்.