பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை எப்பயாவது கஷ்டப்பட்டு ஒரு தனியார் பள்ளியில் சேர்க்க நினைக்கின்றனர், அதற்கு முக்கிய காரணம் அரசு பள்ளிகள் தரமின்மை மற்றும் கௌரவம் போன்ற காரணங்கள் சொல்லப்பட்டாலும் முக்கிய காரணம் தனியார் பள்ளிகள் போல் அரசு பள்ளிகள் செயல் படுவதில்லை.

அப்படி ஒரு மோகத்தால் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை படிப்படியாக குறைந்து வருகிறது. அதைத் தடுக்க முடியாமல் அரசுப் பள்ளி நிர்வாகங்கள் திணறுகின்றன.அதை ஒரு அரசு பள்ளி உடைத்து எறிந்துள்ளது. ஆம் அந்த பள்ளி காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளி.இங்கு 6-ம் வகுப்பில் சேர 200 இடங்களுக்கு 700 பேர் போட்டியிட்டதால், பலரும் தங்களது குழந்தைகளுக்கு இடம் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
நடுநிலைப்பள்ளியாக இருந்த இப்பள்ளி, 2013-2014-ம் கல்வியாண்டில் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. அப்போது இங்கு வெறும் 6 ஆசிரியர்களும் 218 மாணவர்கள் மட்டும் இருந்தனர்.
அதே ஆண்டு புதிதாக தலைமைஆசிரியராக பொறுப்பேற்ற ஆ. பீட்டர்ராஜா முயற்சியால் தனியார் பள்ளிகளைப் போன்று பள்ளி சீருடைகள் , டை, ஷூ அணியும் முறை இங்கு கொண்டு வரப்பட்டது. இது பல பெற்றோரை கவர்ந்தது.
மேலும் இங்கு 2014- 2015-ம் கல்வியாண்டில் ஆங்கில வழிக்கல்வி தொடங்கப்பட்டது. தரம் உயர்த்தப்பட்டதில் இருந்தே 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சியை இந்தப்பள்ளி பெற்று வருகிறது. இதனால் மாணவர் எண்ணிக்கையும் படிப் படியாக உயர்ந்தது.
கடந்த ஆண்டே 1,325 மாணவர்கள் படித்தனர். கரோனா ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்ட மாணவர் சேர்க்கை நேற்று தொடங்கியது. 200 இடங்களே உள்ள 6-ம் வகுப்பிற்கு 700 பேர் இடம் கேட்டு குவிந்தனர். இதனால் சில மணி நேரத்திலேயே மாணவர்கள் சேர்க்கை முடிந்ததால், பலரும் தங்களது குழந்தைகளுக்கு இடம் கிடைக்காமல் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இதுகுறித்து பள்ளித் தலைமை ஆசிரியர் கூறுகையில், ‘‘ ஆசிரியர்கள், கட்டிட வசதி அடிப்படையில் 6-ம் வகுப்பில் 200 மாணவர்களே சேர்க்க முடியும். அதனால் பலருக்கும் இடம் கொடுக்க முடியவில்லை,’’ என்று கூறினார்.ஒரு தனியார் பள்ளிக்கு நிகராக ஒரு அரசு பள்ளி இருப்பது அனைவரையும் ஆசிரியத்தில் ஆழ்த்தியுள்ளது.




