சனிக்கிழமையில் குரூப் 4 தேர்வு நடத்துவது தனியார் நிறுவனங்களில் வேலை பாரக்கும் இளைஞர்களை பாதிப்படையச் செய்யும் செயல் என பாஜகவின் மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா தெரிவித்துள்ளார்.
வரும் 12ந் தேதி குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது. அன்று சனிக்கிழமை என்பதால் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் இளைஞர்களுக்கு அன்றைய தினம் வேலை நாளாக இருக்கும். இதனால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பாதிக்கப்படுவார்கள் என எஸ்.ஜி.சூர்யா குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அரசு வேலையை எதிர்நோக்கி தமிழ்நாட்டின் லட்சக்கணக்கான இளைஞர்கள் ஆர்வமாகக் காத்திருந்த TNPSC GROUP 4 தேர்வுகள் வருகின்ற 12.07.2025 சனிக்கிழமை நடைபெறவுள்ளது. தேர்வு அறிவிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது என்றாலும், அந்தத் தேர்வு நடத்தப்படும் தேதி சனிக்கிழமையில் வருவதால் இத்தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த லட்சக்கணக்கான இளைஞர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். கடந்த காலங்களில் Group 4 தேர்வுகள் ஞாயிற்றுக் கிழமைகளில்தான் நடத்தப்பட்டு வந்திருக்கிறது. அப்போது தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் தேர்வர்களும் தேர்வு எழுதிட வாய்ப்பாக இருந்தது.
ஆனால் தற்போது சனிக்கிழமையில் நடத்தப்படுவதன் மூலம், அரசு இதில் ஏதோ ஒரு வன்மமான வடிகட்டல் செய்ய நினைக்கிறதா என்ற சந்தேகம் பலமாகவே எழுகிறது. குரூப் 4 தேர்வுக்குத் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் தேர்வர்கள் தயாராக இருந்த நிலையில், தனியார் நிறுவனங்களின் வேலை நாளான சனிக்கிழமையில் தேர்வு தேதி நடத்தப்படுவது வன்மையான கண்டனத்துக்குரியதாகும். தமிழக அரசின் TRB மற்றும் TNPSC ஆகிய தேர்வு முகமைகள் இதுவரை ஏன் எந்தவொரு தேர்வினையும் முறையான அறிவிப்பின் படி நடத்துவதில்லை என்ற புகார் தொடர்ந்து இருந்து வருகிறது. அப்படியே தேர்வு நடத்தினாலும் முடிவுகளை வெளியிடுவதில் ஆண்டுக்கணக்கில் தாமதம் ஆகின்றன.

இடைநிலை ஆசிரியர்கள். பட்டதாரி ஆசிரியர்கள். கல்லூரிப் பேராசிரியர்கள் என இதுவரை ஒரு தேர்வும் நடைபெறவில்லை. ஒருவர் கூட பணி நியமனம் செய்யப்படவில்லை. தமிழ்நாட்டையே ஏதோ புரட்டிப் போடப் போவதாக 2021 சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் திமுக பல மாய வாக்குறுதிகளை அளித்தது அதில் அரசுப் பணியிடங்கள் பற்றிய வாக்குறுதியும் முக்கியமானது.
“தமிழக அரசுத் துறைகளில் மூன்றரை லட்சம் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. அவற்றை நிரப்ப உடனடி நடவடிக்கை எடுப்பதோடு மேலும் 2 லட்சம் புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும்” என்று 2021 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதாவது மொத்தம் 5 1/2 லட்சம் அரசு வேலைகளுக்கு நியமனங்கள் நடைபெறும் என்பதுதான் திமுகவின் வாக்குறுதி.
ஆனால் நடந்தது என்ன தெரியுமா? திமுக ஆட்சிக்கு வந்து நான்கு வருடங்கள் ஆகிவிட்ட நிலையிலும் இன்று வரை ஒட்டுமொத்தமாக சுமார் 70 ஆயிரம் பேருக்கு மட்டுமே அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது அதிலும் கூட முப்பதாயிரம் பேர் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டவர்கள். ஆக வேலைவாய்ப்பு விஷயத்தில் ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதியில் அவர் பாதியைக் கூட நிறைவேற்றவில்லை. TNPSC Group 4 தேர்வினை ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது பத்து இலட்சம் இளைஞர்கள் எழுதுகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள்.
அரசு வேலை என்பது இலக்காக இருந்தாலும் அதுவரை தங்கள் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தாங்கள் படித்த படிப்புக்கு ஏற்றதாக இல்லை என்றாலும் கிடைத்த சம்பளத்தில் பல்வேறு தனியார் நிறுவனங்களில் அவர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். வாழ்வாதாரத்துக்கான தனியார் பணியில் இருந்து கொண்டே அரசு தேர்வுகளை எழுதி வருகிறார்கள். இதுதான் இன்றைய தமிழ்நாட்டின் எதார்த்த சூழல்.
ஆனால் அவர்கள் அரசு தேர்வை எழுதக் கூட அனுமதிக்க கூடாது என்ற வகையில் தான் சனிக்கிழமையில் தேர்வு தேதி முடிவு செய்யப்பட்டு இருக்கிறதா மத்திய அரசின் தேர்வு பண்டிகை காலங்களில் அறிவிக்கப்படுகிற போது திமுகவினரும் இடதுசாரிகளும் எதிர்ப்பதும்… பல்வேறு மாநில நிலவரங்களைக் கருத்தில் கொண்டு அந்த தேர்வு தேதிகள் முடிவு செய்யப்பட்டிருந்தாலும் எழுந்த எதிர்ப்புக்கு மதிப்பளித்துத் தேர்வு தேதி மாற்றப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் உடனடியாக வருகிற ஜூலை 12 சனிக்கிழமையில் நடத்த இருக்கிற தேர்வு தேதியை மாற்றி அமைக்க வேண்டும் என லட்சக்கணக்கான இளைஞர்கள் சார்பில் அரசை வலியுறுத்துவதாக அதில் குறிப்பிட்டுள்ளார்.




