
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து டில்லியில் 70 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் போராடி வருகின்றனர். இது தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படவில்லை
விவசாயிகள் போராட்டம் குறித்து சர்வதேச அளவில் பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்ததோடு இந்திய பிரபலங்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த விவகாரம் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது.
விவசாயிகள் போராட்டத்திற்கு தற்போது சர்வதேச அளவில் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அமெரிக்க பாடகி ரிஹானா, விவசாயிகளின் போராட்டம் பற்றிய செய்தியை பகிர்ந்து, ‘ஏன் இதைப் பற்றி யாரும் பேசுவதில்லை?’ என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
சுவீடன் நாட்டை சேர்ந்த 18 வயதான கிரேட்டா தன்பெர்க், ‘போராடி வரும் இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக நிற்போம்’ என பதிவிட்டார். இதுபோல், சர்வதேச பிரபலங்கள் பலரும் இதற்கு ஆதரவு தெரிவிப்பதாக டுவிட்டரில் பதிவிட்டதால் சர்வதேச அளவில் இவர்களின் போராட்டம் கவனத்தை ஈர்த்தது.
இந்நிலையில், ”விவசாயிகள் போராட்டம் துரதிருஷ்டவசமானது. ஆனால், சில சுயநலவாதிகள், தங்களுடைய விருப்பங்களை, விவசாயிகள் மீது திணித்துள்ளனர். இந்தப் போராட்டங்களை இந்தியாவின் ஜனநாயக பண்பாகவே உலகம் பார்க்க வேண்டும். அரசும், விவசாயிகளும் நிச்சயம் இதற்கு ஜனநாயக முறையில் தீர்வு காண்பார்கள்.
இதுபோன்ற பிரச்னைகளில் கருத்து தெரிவிப்பதற்கு முன்பு, இந்தப் பிரச்னைகள் குறித்து புரிந்துகொண்டு சரியான தகவல்களை மட்டுமே தெரிவிக்க வேண்டும். பிரபலங்களால் போராட்டம் குறித்து தெரிவிக்கப்படும் கருத்துகள் எதுவும் சரியானவை அல்ல” மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியிருந்தது.
அதோடு அக்ஷய் குமார், அஜய் தேவ்கன், கங்கனா ரணாவத், சுனில் ஷெட்டி, கரண் ஜோகர் போன்ற திரைப்பிரபலங்களும் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, அனில் கும்ளே போன்ற கிரிக்கெட் வீரர்கள் இந்த விவகாரத்தில் வெளிநாட்டினர் தலையிடுவதை விரும்பவில்லை என்கிற ரீதியில் கருத்து பதிவிட்டனர். இதனால் டுவிட்டரில் விவசாயிகள் போராட்டத்தையும், இவர்கள் தெரிவித்த கருத்துக்களை வைத்தும் பலரும் கருத்து பதிவிட்டு வருவதால் இந்த விவகாரம் டிரெண்ட் ஆகின.
வெளிநாட்டவர்களின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து, ”வெளிநாட்டவர்களுக்கு நமது மதிப்பும், போராட்டத்தின் வலியும் தெரிகிறது. ஆனால் இங்கு இருக்கும் சுயநலவாதிகள் அதுபற்றி கண்டு கொள்ளவே இல்லை. கருத்து கூறும் சிலரையும் இங்குள்ள முதுகில்லாத திரைநட்சத்திரங்கள் தடுக்கின்றனர்” என கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
அதேசமயம் வெளிநாட்டவரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, ”இந்த சமயத்தில் நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். சில சுயநலவாதிகள் தங்களது கருத்துக்களை நம் மீது திணித்து நமது ஒற்றுமையை சீர்குலைக்க பார்க்கிறார்கள். வேற்றுமையில் ஒற்றுமை கண்ட நாடு நமது இந்திய நாடு. பல மொழிக்காரர்கள், பல மதக்காரர்கள் ஒன்றாக வாழ்ந்து வருகிறோம். நமது ஒற்றுமையை எங்கும் விட்டுக் கொடுக்க கூடாது, அந்நியர்களின் கருத்துக்கு மயங்க வேண்டாம். ஒற்றுமையாக இருந்து, இந்த பிரச்னையை தீர்ப்போம்” என கருத்து பதிவிட்டுள்ளனர்.
இதனால் டுவிட்டரில் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், எதிராகவும், பிரபலங்களின் கருத்துக்களுக்கு ஆதரவாகவும், எதிராகவும் #WorldSupportsIndianFarmers, #AntiNationalBollywood, #FarmersProstest, #SpinelessCelebs, #IStandWithFarmers, #IndiaStandsTogether, #SachinTendulkar, #Taapsee, #Cricketers என பல ஹேஷ்டாக்குகள் டிரெண்ட் ஆகின.




