தலைநகர் சென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருவதால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தென் மேற்குப் பருவமழைக் காலம் நிலவி வருவதால், கடந்த சில வாரங்களாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே, தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் 12 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், சென்னையின் கிண்டி, சைதாப்பேட்டை, வடபழனி, கோடம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. அதேபோல், புறநகர் பகுதிகளான தாம்பரம், சேலையூர், குரோம்பேட்டை, பல்லாவரம், பம்மல் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதே போல், நந்தம்பாக்கம், போரூர், ராமாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக கன மழை பெய்து வருகிறது. இதனால் சாலை ஓரங்களில் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது.
மேலும், பல இடங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டு குளிச்சியான சூழல் நிலவுகிறது. மழை காரணமாக வெப்பம் தனிந்துள்ளதால் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.