கொரோனா ஊரடங்கைத் தொடர்ந்து பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வசூலிக்கக்கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தனியார் பள்ளிகள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ், கடந்த கல்வியாண்டில் வசூலிக்கப்பட்ட கல்வி கட்டணத்தில் 75 சதவீதத்தை, 2 தவணையாக வசூலித்துக்கொள்ள அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
ஆனால், சில தனியார் பள்ளிகள் முழு கல்வி கட்டணத்தையும் பெற்றோர்களிடம் இருந்து வலுக்கட்டாயமாக வசூலித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது நீதிபதியின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டதும், அந்த பள்ளிகளுக்கு எதிராக தாமாக முன்வந்து கோர்ட்டு அவமதிப்பு வழக்கை பதிவு செய்தார். இந்த வழக்கிற்கு பதில் அளிக்க அந்தப் பள்ளிகளுக்கு உத்தரவிட்டார்.
அதேபோல முழு கல்விக் கட்டணம் வசூலித்த சி.பி.எஸ்.இ பள்ளிகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சி.பி.எஸ்.இ. சென்னை மண்டல அதிகாரிக்கு நீதிபதி உத்தரவிட்டார். இந்த நிலையில் இந்த வழக்குகள் நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, முழு கல்விக் கட்டணம் வசூலித்ததாக குற்றச்சாட்டுக்கு ஆளான 32 சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் விவரங்கள் அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டது.
இந்த அறிக்கையை படித்துப் பார்த்த நீதிபதி, இந்தப் பள்ளிகள் மீதான புகாரை விசாரித்து, சட்டப்படி நடவடிக்கை எடுத்து, அதுதொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். அதுமட்டுமல்லாமல். அந்தப் பள்ளிகள் தங்கள் மீதான புகாருக்கு விளக்கம் அளித்து ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார்.
அப்போது தனியார் பள்ளிகள் சார்பில் ஆஜரான வக்கீல்கள், “ஐகோர்ட்டு உத்தரவின்படி 40 சதவீத கட்டணத்தை முதல் தவணையாகவும், பள்ளித்திறந்த பின்னர் 35 சதவீத கட்டணத்தை 2-வது தவணையாகவும் பள்ளிகள் வசூலிக்க வேண்டும். ஆனால், முதல் தவணையான 40 சதவீத கட்டணத்தை கூட சில பெற்றோர்கள் இன்னும் செலுத்தாமல் உள்ளனர். கட்டணத்தை செலுத்தவேண்டும் என்று பெற்றோரை பள்ளி நிர்வாகம் நிர்ப்பந்திக்கவில்லை. பள்ளிகள் திறந்த உடன் 35 சதவீத கட்டணத்தை வசூலித்து கொள்ளலாம் என ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஆனால், பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? என்றே தெரியவில்லை.
எனவே, அந்த 35 சதவீத கட்டணத்தை வசூலித்துக் கொள்ள அனுமதி அளிக்க வேண்டும். ஆன்-லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதால் ஆசிரியர்களுக்கான ஊதியம் உள்ளிட்ட இதர செலவுகளை சமாளிக்க தனியார் பள்ளிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளது” என்று வாதிட்டனர்.
இதையடுத்து நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ், “தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? இந்த ஆண்டு இறுதிக்குள் (டிசம்பர் மாதத்துக்குள்) பள்ளிகள் திறக்க வாய்ப்பு உள்ளதா? என்பது குறித்து தமிழக அரசிடம் கேட்டு தெரிவிக்க வேண்டும்.
இந்த வழக்கை வருகிற நவம்பர் 11-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறேன். அன்று பள்ளிகள் திறப்பு தொடர்பான அரசின் நிலைப்பாட்டை பொறுத்து, மீதமுள்ள 35 சதவீத கல்விக் கட்டணத்தை பள்ளி நிர்வாகம் வசூலிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்” என்று உத்தரவிட்டார்.