தமிழ்நாட்டின் முன்னாள் திமுக முதலமைச்சர் மு.கருணாநிதியின் நினைவுநாளை ஒட்டி ஆகஸ்டு 7ம் தேதி அமைதிப் பேரணி நடைபெறும் என்று திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக திமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
அண்ணா மறைவிற்கு பிறகு திமுக தலைவராக ஏறத்தாழ 50 ஆண்டுகள் பொறுப்பு வகித்து அகில இந்திய அரசியலில் சிறந்த வழிகாட்டியாக திழந்து தமிழக வரலாற்றில் தமக்கென்று சில பக்கங்களை ஒதுக்கிக் கொண்டவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி.அவரது 4வது நினைவு நாளை முன்னிட்டு தமிழக முதலமைச்சரும், கட்சியின் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் ‘அமைதிப்பேரணி’ வருகிற ஆகஸ்டு 7ம் தேதி நடைபெறவுள்ளது.
அதன்படி, அன்று காலை 8:30 மணிக்கு சென்னை அண்ணா சாலை, ஓமந்தூரர் வளாகத்தில் அமைந்துள்ள கருணாநிதி சிலை அருகில் புறப்பட்டு காமராஜர் சாலையில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடத்தில் முதல் அமைச்சர், கட்சி நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவார்கள்.இந்நிகழ்வில் கட்சி உறுப்பினர்கள்,தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு அஞ்சலி செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.