தமிழகத்தில் நாளைமுதல் தனியார் பால்விலை லிட்டருக்கு ₹4 உயர்கிறது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொரோனா ஊரடங்கை அமல்படுத்துவதற்கு முன்பாக தனியார் பால் விலை லிட்டருக்கு ₹6 உயர்த்தப்பட்டது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது விற்பனை சரிந்துவிட்டதாக கூறி கொள்முதல் விலையை லிட்டருக்கு ₹18 குறைத்தது. ஆனால் விற்பனை விலையை குறைக்கவில்லை.
இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜனவரி, பிப்ரவரியில் மாதம் ஒருமுறையும், ஏப்ரல், மே மாதம் ஒருமுறையும் பால் மற்றும் தயிர் விற்பனை விலையை லிட்டருக்கு ₹4 உயர்த்தியது. இந்த நிலையில் தனியார் பால்விலை லிட்டருக்கு ₹3 உயர்த்தப்படுகிறது. இன்று முதல் சீனிவாசா பால் நிறுவனம் லிட்டருக்கு ₹2 உயர்த்தியிருக்கிறது.
ஹட்சன் நிறுவனம் நாளை(12.08.2022) முதல் பால் & தயிர் விலையை லிட்டருக்கு ₹4 உயர்த்துவதாக அறிவித்துள்ளது.இதை தொடர்ந்து பிற நிறுவனங்களும் பால்விலையை உயர்த்தப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தின் பால் தேவையில் 16% மட்டுமே ஆவின் நிறுவனம் பூர்த்தி செய்கிறது. 84% தனியார் நிறுவனங்கள் மூலமே பூர்த்திசெய்யப்படுகிறது. இதன் காரணமாக தனியார் நிறுவனங்கள் தன்னிச்சையாக பால்விலையை உயர்த்துகின்றன. இதனால் பால் சார்ந்த உணவுப்பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த விலை உயர்வு அறிவிப்பில் தமிழக அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பால் முகவர்கள், தொழிலாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.