குருவாயூர் கோயிலில் ஒரே நாளில் 200 ஜோடிகள் திருமணம் செய்ய முன்பதிவு செய்துள்ளனர்.
கேரளாவில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற கோயில் குருவாயூர். இந்த கோயிலில் திருமணம் செய்வது வளமான வாழ்க்கைக்கு உதவும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. குறிப்பாக, கிருஷ்ண ஜெயந்தி மற்றும் அதனை தொடர்ந்து வரும் நாட்களில் பலரும் திருமணம் செய்து கொள்வது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான கிருஷ்ண ஜெயந்தி வரும் 19ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதை அடுத்து வரும் 21ம் தேதி சுபமுகூர்த்த தினமாகும். அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பலரும் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர்.
கடந்த 8ம் தேதி முன்பதிவு தொடங்கிய நிலையில் இதுவரை சுமார் 200 ஜோடிகள் 21ம் தேதி திருமணம் செய்துகொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இதையடுத்து முன்பதிவை கோயில் நிர்வாகம் நிறுத்தியது. இதனால் சிலர் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் 21ம் தேதி திருமணம் செய்ய விரும்புவோரின் மனுக்களை ஏற்க வேண்டும் என அறிவுறுத்தியது. மேலும், இதுதொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை அடுத்து குருவாயூர் கோயில் நிர்வாகம் அறிக்கையை தாக்கல் செய்தது. அதில், 21ம் தேதி திருமணம் செய்துகொள்ள விரும்புவோரின் முன்பதிவு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. குருவாயூர் நகராட்சியும், திருமண பதிவுக்காக விடுமுறை நாட்களிலும், நகராட்சி அலுவலகத்திலும் கூடுதல் ஊழியர்களை நியமனம் செய்துள்ளதாக கூறியுள்ளது. அவர்கள் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை பணியில் இருப்பார்கள் என்று தெரிவித்துள்ளது.