கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத சுற்றுலா வளர்ச்சி அடுத்த 10 ஆண்டுகளில் ஏற்படும் என உத்தரகண்டில் பிரதமர் மோடி பேச்சு.
டெல்லி, பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் உள்ள மாநிலங்களில் “உத்தரகண்ட்” மாநிலமும் ஒன்று! ஆனாலும் மாநிலத்தின் உட்கட்சி மோதல் காரணமாக கடந்த ஒரே வருடத்தில் 2 முதலமைச்சர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். மேலும், மாநிலத்தில் அவ்வப்போது ஏற்பட்ட பேரிடரின் போது பலர் உயிரிழந்ததும், சுற்றுலாவை நம்பியுள்ள மக்கள் பொதுமுடக்கம் மற்றும் பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட போது ஆளும் அரசு பெரிய அளவில் உதவி செய்யவில்லை என்பதெல்லாம் பாஜகவுக்கு சற்றே பின்னடைவாக கருதப்படுகிறது.
இந்நிலையில், அடுத்த வருடம் தொடக்கத்தில் உத்தரகண்ட் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பாரதிய ஜனதா கட்சி உத்தரகண்ட் மாநில தேர்தலில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் இன்று உத்தரகண்ட் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, கேதார்நாத் கோவில் பயணம் என ஆன்மீகம் சார்ந்த சில விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்தார். இருப்பினும் மாநிலத்தின் தேர்தலை கருத்தில் கொண்டு பாஜக ஆட்சிக்கு பிறகு கொண்டுவரப்பட்ட திட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்தார்.
குறிப்பாக தேர்தலை மையப்படுத்தும் விதமாக மாநிலத்தின் அடுத்த 10 ஆண்டு திட்டங்கள் குறித்தும் பேசியுள்ளார், குறிப்பாக மாநிலத்தின் பெரும் வளர்ச்சி சுற்றுலாவை நம்பி உள்ளதாகவும் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சி அடுத்த 10 ஆண்டுகளில் சுற்றுலா துறையில் ஏற்படுத்தி தரப்படும் என பிரதமர் மோடி பேசியுள்ளார். இப்போது கேதார்நாத் கோவிலுக்கு செல்வது சற்றே கடினமாக இருக்கிறது ஆனால் எதிர்காலத்தில் அதனை எலிமையாக்கும் வகையில் ரோப்கார் அமைக்கும் திட்டங்கள் உள்ளது.
கேதார்நாத்-தை தவிர்த்து ஹேம்குந்த் சாஹிப் உள்ளிட்ட இடங்களை இணைக்கும் வகையில் ரோப் கார் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதமர் மோடி பேசினார். மேலும், மலை பகுதியில் உருவாகும் நீரும், மலை பகுதியில் வாழும் இளைஞர்களும் இனிமேல் அவர்களின் பகுதிக்கே என்ற வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என பேசிய பிரதமர் நாட்டில் ஆன்மீக இடங்கள் புத்துயிர் பெற்று வருகிறது குறிப்பாக உத்திரபிரதேசத்தில் அயோத்தியும்,காசியும் ஆன்மீக ரீதியில் புத்துயிர் பெற்று வருவதாகவும் குறிப்பிட்டார்.
அடுத்து வரக்கூடிய ஆண்டுகளில் உத்தரகண்ட் மக்களின் சாதாப்தம் என்பதால் யாரும் மாநிலத்தை விட்டு புலம்பெயர்ந்து செல்ல வேண்டாம் எனவும் மாநிலத்தின் வளர்ச்சி மக்களின் கையிலே உள்ளதால் வரும் ஆண்டுகளில் ஒன்று சேர்ந்து மாநிலத்தின் வளர்ச்சிக்கு பாடுபடலாம் என பிரதமர் பேசியுள்ளார்.