ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் காத்திருப்போர் பட்டியலுக்கு இடமாற்றம் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை
ராமநாதபுரம் நகரில் கடந்த ஆகஸ்ட் 31 அன்று அருள் பிரகாஷ் என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். போதை பொருள் மாபியா கும்பல்களிடையிலான முன்பகையின் காரணமாக நடைபெற்ற இந்தக் கொலைக்கு வகுப்புவாத சாயம் பூச பாஜக தரப்பினர் மிகப்பெரும் முயற்சிகளை மேற்கொண்டனர்.
இந்த கொலையை நடுநிலையாக விசாரித்து வந்த ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் வருண்குமார், “அருண் பிரகாஷ் கொலை, இரு குழுவினருக்கு இடையே தனிப்பட்ட விரோதத்தில் நடந்த சம்பவம். இதில் மதச்சாயம் பூச சில நபர்கள் முயற்சிக்கின்றனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளில் பல மதத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். இந்த வழக்கில் மதம் சார்ந்த பிரச்சனை ஏதுமில்லை. வதந்தி பரப்புபவர்களை நம்ப வேண்டாம். இது முற்றிலும் தனிப்பட்ட விரோதம் காரணமாக நடந்த கொலை வழக்கு. 3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை காவல் துறையினர் தேடி வருகின்றனர்”
என்று பதிவிட்டிருந்தார்.
உண்மை இப்படியிருக்க பாஜகவினர் இந்தக் கொலைக்கு மதச் சாயம் பூசி ராமநாதபுரத்தில் பதற்றம் ஏற்படுத்த முயன்றனர்.
குறிப்பாக பாஜக தேசியச் செயலாளர் ஹெச் ராஜா என்பவரின் முன்னெடுப்பில் பல பாஜகவினர் தொடங்கி, ஆர்எஸ்எஸ் அமைப்பின் அதிக்காரப்பூர்வ வார இதழான ஆர்கனைசர் வரை இந்தக் கொலையை ஒரு வகுப்புவாத கொலையாகச் சித்திரிப்புச் செய்து சமூக வலைத்தளத்தில் வெறுப்புப் பரப்புரைகளை மேற்கொண்டனர்.
கடந்த காலங்களிலும் இதே போல் ராமநாதபுரத்தில் அமைதியைக் குலைக்கும் வகையில் பரப்புரை செய்துள்ளனர்.
எடுத்துக்காட்டாக கடந்த 2017, ஜூன் மாதம் 22ந் தேதியன்று பாஜ கட்சியின் இராமநாதபுரம் நகரத்தின் நிர்வாகியாக இருந்த அஸ்வின் குமார் மற்றும் அவரது தந்தை கடுமையாக தாக்கப்பட்டனர். எச்.ராஜா வெளியிட்ட பத்திரிகைச் செய்தியில் அஸ்வின்குமார் மற்றும் அவரது தந்தை “முஸ்லீம் பயங்கரவாதிகளால் மிருகத்தனமாக தாக்கப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.”
என்று குறிப்பிட்டுக் கலவரத்தைத் தூண்டினார்.
இந்தத் தாக்குதல் குறித்து விசாரித்த ராமநாதபுரம் காவல்துறை மணிகண்டன், தஸ்வே ரவி, முத்துராமலிங்கம், தஸ்வே தவசிநாதன் மற்றும் சதீஸ் என 5 பேரை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
இவர்களில் யாரும் முஸ்லிம் அல்லர்.ஆனாலும் பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா வன்மத்தோடு கலவரத்தைத் தூண்டிவிட்டிருந்தார்.
இந்தப் பின்னணியில் கடந்த காலங்களில் பல அரசு விசாரணை ஆணையங்கள் அளித்துள்ள பரிந்துரைகளின் அடிப்படையில் நேர்மையான முறையில் விசாரணை மேற்கொண்டு பதற்றத்தைத் தணித்து அமைதியை ஏற்படுத்திய லஞ்ச லாவண்யத்திற்கு துணை போகாத ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரியான வருண் குமாரை தமிழக அரசு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியிருப்பது வன்மையாக கண்டிக்கதக்கது. தமிழக அரசு பாஜகவின் நிர்பந்தங்களுக்கு அடிபணிந்து ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரியை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியிருப்பது தமிழகத்தை ஆளுவது அதிமுகவா அல்லது பாஜகவா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இப்படிக்கு
எம் எச் ஜவாஹிருல்லா
தலைவர்