பொதுவெளியில் அவதூறாகப் பேசுவதைக் கண்டிக்காமல், சுஷாந்த்தின் கொலைக்கு எதிராகப் போராடிவருபவர்களை அவதூறாகப் பேசும் கருத்துகளை மும்பை காவல்துறை லைக் செய்திருக்கிறது. இதைவிட மோசமான நிலைக்கு மும்பை காவல்துறை இறங்கிவிட முடியாது.
பாலிவுட்டில் சுஷாந்த் சிங் மரணம் ஏற்படுத்திய தாக்கம் இன்னும் குறையவில்லை. ஒருபுறம், சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ விசாரித்துவர, பணப் பரிமாற்றம் தொடர்பான வழக்குகளை அமலாக்கத்துறை விசாரித்துவருகிறது. தற்போது அந்த வழக்கில் புதிதாக போதைப் பொருள் பயன்பாடு குறித்த தகவல்கள் வெளிவர, போதைப் பொருள் தடுப்புக் குழுவும் இந்த வழக்கில் புதிதாக இணைந்திருக்கிறது.
மறுபுறம், `சுஷாந்த் சிங் மரணத்துக்கு பாலிவுட்டிலிருக்கும் நெப்போடிசம்தான் காரணம்’ என ஓப்பனாகப் பேசிய நடிகை கங்கனா ரனாவத், தொடர்ந்து அது தொடர்பாக பல்வேறு விஷயங்களைப் பேசிவருகிறார். கங்கனா ரனாவத், தொடர்ச்சியாக `பாலிவுட் மாஃபியா’ என்று குறிப்பிட்டு பல முக்கிய நட்சத்திரங்களைக் கடுமையாக விமர்சித்துவந்தார். `கரண் ஜோகர், ஆதித்யா சோப்ரா, ராஜீவ் மசாந்த், மகேஷ் பட் உள்ளிட்ட ரத்தவெறி பிடித்த கழுகுக் கூட்டப் படையான மூவி மாஃபியாதான் சுஷாந்த்தைக் கொலை செய்தது’ என விமர்சித்திருந்தார்.
இதற்கிடையே, கங்கனா ரனாவத் உள்ளிட்ட சிலரை, பெயர் குறிப்பிடாமல் போடப்பட்டிருந்த அவதூறுப் பதிவை, மும்பை காவல்துறையின் ஒரு ட்விட்டர் கணக்கு லைக் செய்திருந்தது. தொடர்ந்து மும்பையில் தனக்கான பாதுகாப்பு குறித்தும் கேள்வி எழுப்பினார். அது தொடர்பாக சில ட்வீட்களை பிரதமர் மோடியை டேக் செய்து பதிவிட்டிருந்தார் கங்கனா. இதற்கிடையே மும்பை காவல்துறை, கங்கனாவின் `ட்வீட்’டுக்கு பதிலளிக்கும்விதமாக ட்விட்டரில், “இப்படி ஒரு பதிவுக்கு மும்பை காவல்துறை லைக் பதியவில்லை. ஸ்கிரீன் ஷாட் குறித்து விசாரிக்கிறோம்” எனக் குறிப்பிட்டது.
இந்த `ட்வீட்’டைத் தொடர்ந்து கங்கனாவுக்கும் மகாராஷ்டிரா ஆளும் அரசுக்கும் பெரும் மோதலே நடந்துவருகிறது.