பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் மீது கர்நாடகா மாநிலத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கில் பாலிவுட் மீது வெளிப்படையான புகார்களை நடிகை கங்கனா தெரிவித்து வந்தார். பாலிவுட் பட உலகில் போதை புழக்கம் உள்ளதாகவும் முன்னணி நடிகர்கள் இதை பயன்படுத்துவதாகவும் தொடர்ந்து புகார் சொல்லி வருகிறார் நடிகை கங்கனா ரனாவத். இந்நிலையில் சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் பற்றியும் சர்ச்சை கருத்தை அவர் வெளியிட்டார்.
தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறும்போது, “குடியுரிமை சட்டத்தை எதிர்த்தவர்கள்தான் விவசாய சட்டங்களையும் எதிர்க்கின்றனர். இந்த சட்டங்களை எதிர்ப்பவர்கள் பயங்கரவாதிகள்” என்று சர்ச்சைக்குரிய வகையில் அவர் பதிவிட்டு இருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் கர்நாடகத்தை சேர்ந்த வழக்கறிஞர் ரமேஷ் நாயக், துமக்கூரு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் விவசாயிகளை புண்படுத்தும் வகையிலும், வன்முறையை தூண்டும் வகையிலும் கருத்து தெரிவித்த கங்கனா மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார். இதை ஏற்ற நீதிமன்றம் கங்கனா ரனாவத் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்குமாறு போலீஸாருக்கு உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து கியாதசந்திரா போலீஸ் நிலையத்தில் கங்கனா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.




