லக்கிம்பூர் கேரி விவசாயிகள் போராட்டம் மற்றும் வன்முறைகளில் 8 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பான விசாரணைக்கு, ஒரு நபர் ஆணையத்தை உத்தர பிரதேச அரசு அமைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூர் மாவட்டத்தில் மாநில துணை முதல்வர், மத்திய இணை அமைச்சர் ஆகியோர் கலந்து கொள்ளவிருந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்திற்கு அருகே மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகள் பேரணியாக சென்று கொண்டிருந்தனர். அப்போது மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஷின் பாதுகாப்பிற்காக உடன் சென்ற கார் விவசாயிகள் மீது மோதியதாக கூறப்படுகிறது.
கார் மோதியதில் 4 விவசாயிகள் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து வன்முறை வெடித்ததில் 8 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, லக்கிம்பூர் வன்முறைக்கு பல தலைவர்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து,பிரியங்கா காந்தி சீதாபூரிலிருந்து நேரடியாக லக்கிம்பூர் சென்றடைந்தார்.அதேபோல் ,ராகுல் காந்தி நேற்று இரவு 7.45 மணிக்கு லக்கிம்பூர் சென்றடைந்தார்.இந்த சந்திப்பின் போது லவ்ப்ரீத்தின் குடும்பத்தினருடன் துக்கத்தைப் பகிர்ந்துகொண்டனர்,அதன்பின்னர்,ராகுல் காந்தி நீதி கிடைக்காத வரை, இந்த சத்தியாகிரகம் தொடரும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருந்தார்.
இதற்கிடையில்,விவசாயிகளின் போராட்டத்தில் கார் புகுந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதனால்,விவசாயிகளின் உயிரிழப்பிற்கு காரணமானவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்ற குரல் நாடு முழுவதும் எழுந்து வருகிறது.
இந்நிலையில்,லக்கிம்பூர் கேரி விவசாயிகள் போராட்டத்தில் 8 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பான விசாரணைக்கு, ஒரு நபர் ஆணையத்தை உத்தர பிரதேச அரசு அமைத்துள்ளது.
அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி பிரதீப்குமார் ஸ்ரீவஸ்தவா தலைமையில் இந்த ஆணையத்தை உ.பி. அரசு அமைத்துள்ளது.மேலும், விசாரணையை முடித்து இரண்டு மாதத்தில் அறிக்கை தரவும் ஆணையத்துக்கு உத்திர பிரதேச மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.