ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழா ஒன்றில் வழங்கப்பட்ட நினைவுப் பரிசில் திருக்குறள் போல ஒரு வாசகத்தை அச்சிட்டுக் கொடுத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 13ந் தேதி ஆளுநர் மாளிகையில் மூத்த மருத்துவர்களைச் சிறப்பிக்கும் விழா ஒன்று நடைபெற்றது. அப்போது வழங்கப்பட்ட நினைவுப்பரிசில் இடம்பெற்றிருந்த வாசகம் திருக்குறள் போல எழுதப்பட்டு குறள் எண்ணும் கொடுக்கப்பட்டிருந்தது. இல்லாத ஒன்றை இருப்பதைப் போல அச்சிட்டு கொடுத்த விவகாரம் இலக்கியம் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள கவிஞர் வைரமுத்து, எங்கள் திருவள்ளுவரை விட்டுவிடுங்கள் என்றும், ஆளுநர் மாளிகையில் ஒரு திருவள்ளுவர் இருக்கிறார் போலும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஜூலை 13இல்
‘வள்ளுவர் மறை
வைரமுத்து உரை’ நூலை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
வெளியிட்ட அதே நாளில்
ஆளுநர் மாளிகையில்
ஒரு விழா
நடந்ததாய்க் கேள்விப்பட்டேன்
மருத்துவர்களுக்கு
வழங்கப்பட்ட
நினைவுப் பரிசில்
944ஆம் திருக்குறள் என்று
அச்சடிக்கப்பட்ட வாசகத்தில்
இல்லாத குறளை
யாரோ எழுதியிருக்கிறார்கள்
அப்படி ஒரு குறளே இல்லை;
எண்ணும் தவறு
யாரோ ஒரு
கற்பனைத் திருவள்ளுவர்
விற்பனைக் குறளை
எழுதியிருக்கிறார்
இது எங்ஙனம் நிகழ்ந்தது?
ராஜ்பவனில்
ஒரு திருவள்ளுவர்
தங்கியுள்ளார் போலும்
அந்தப்
போலித் திருவள்ளுவருக்கு
வேண்டுமானால்
காவியடித்துக்கொள்ளுங்கள்
எங்கள்
திருவள்ளுவரை விட்டுவிடுங்கள்
– வைரமுத்து




