5 மாதங்களுக்குப் பிறகு மால்கள் திறக்கப்பட உள்ள நிலையில், சுத்தம் செய்யும் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.
தமிழகம் முழுவதும் கொரோனா ஊரடங்கு காரணமாக பெரிய வணிக வளாகங்கள் ( மால்கள் ) அனைத்தும் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் செப்டம்பர் 1ம் தேதி முதல் மால்களை திறக்க தமிழக அரசு உத்தரவினை பிறப்பித்ததைத் தொடர்ந்து மால்களை சுத்தம் செய்யும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
சென்னை வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் சுத்தம் செய்யும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 100 இடங்களில் கிருமி நாசினிகள் வைக்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்கள் வருகையை கண்காணித்திட கட்டுப்பாட்டு அறை மூலமாக கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. 13,200 பேர் ஒரே நேரத்தில் பொருட்கள் வாங்க வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் போது அவர்கள் தனியாக வேறு ஒரு இடத்தில் தங்க வைக்கப்பட்டு மீண்டும் மாலுக்குள் அனுமதிக்கப்படும்படி ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.
பொதுமக்கள் மாஸ்க் அணிதல் , தனிமனித இடைவெளியை கடைப்பிடித்தல், கிருமி நாசினி கொண்டு மால்களை சுத்தம் செய்தல், உள்ளே உள்ள கடைகளில் ஒரே நேரத்தில் 5 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் செல்வதைத் தவிர்த்தல், எளிதில் நோய்த் தொற்று பரவும் இடங்களாக கண்டறியப்பட்ட தானியங்கி படிக்கட்டுகள், உணவுக் கூடங்கள் முதலியவற்றில் பொது மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட நடைமுறைகளைப் பின்பற்ற வணிக வளாகங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.