திருவள்ளூர் : புழல் அருகே தனக்குத்தானே தீவைத்துக்கொண்டு சாலையில் ஓடியவரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை புழல் அடுத்த விநாயகபுரம் பால விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 46). இவரது மனைவி பெயர் ஜெயந்தி (வயது 40). இந்த நிலையில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு வேல்முருகனின் மூத்த மகன் தற்கொலை செய்து கொண்டதால் விரக்தி அடைந்த அவர் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார்.
கடந்த இரண்டு நாளுக்கு முன்பு மீண்டும் வீட்டுக்கு வந்து மது போதையில் தகராறு செய்ததாகவும் இதனால் அவரது மனைவி ஜெயந்தி வீட்டில் சேர்க்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனவருத்தத்தில் இருந்த அவர் நேற்று மதியம் குடிபோதையில் தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டு விநாயகபுரம் பேருந்து நிலையம் அருகே செங்குன்றம் பெரம்பூர் நெடுஞ்சாலையில் அலறியடித்து ஓடினார்.
இதனை கண்ட அருகில் இருந்தவர்கள் எரிந்துகொண்டிருந்த அவரை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். பின்னர் இதுகுறித்து புழல் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததன் பேரில் அவர்கள் வந்து 98 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அவரை சேர்த்தனர்.
அங்கு அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்துவிட்டதாக மருத்துவமனையில் தகவல் தெரிவித்தனர் மேலும் இதுகுறித்து புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இது தொடர்பான காட்சிகள் வெளியாகி பதைபதைக்க வைத்துள்ளது.