காணொலி காட்சி மூலம் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், தேசிய விளையாட்டு விருதுகளை வழங்கினார். அந்த விழாவில், தமிழகத்தின் மாரியப்பன் தங்கவேலு, குடியரசு தலைவரிடம் இருந்து, கேல் ரத்னா விருதைப் பெற்றுக்கொண்டார்.

இந்திய ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தயான் சந்த் பிறந்த நாளான ஆகஸ்ட் 29-ஆம் தேதி, தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், இந்த நாளில், விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு, மத்திய அரசு சார்பில் ‘கேல் ரத்னா’, ‘ அர்ஜூனா’ உள்ளிட்ட விருதுகளை, ஜனாதிபதி வழங்கி வீரர்களைக் கவுரவிப்பார்.
இந்த ஆண்டு, ‘கேல் ரத்னா ‘ விருது 5 பேருக்கும், ‘ தயான் சந்த்’ விருது 15 பேருக்கும், ‘அர்ஜூனா விருது’ 27 பேருக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த ஆண்டுக்கான, விருது வழங்கும் விழா, டில்லியில் உள்ள விக்யான் பவனில், வீடியோ கான்பரன்சிங் முறையில் நடந்தது. விழாவில் குடியரசு தலைவர் ராம்நாத் கலந்துக் கொண்டு, விருதுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் நரேந்திர துருவ் பாத்ரா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இதேபோல் நாட்டின் பல்வேறு விளையாட்டு ஆணைய மையங்களில் நடைபெற்ற நிகழ்ச்சியில், விளையாட்டு வீரர்கள் பங்கேற்று விருதுகளை பெற்றுக்கொண்டனர்.

கேல் ரத்னா விருதை மாரியப்பன் தங்கவேலு, ராணி ராம்பால், மணிகா பத்ரா ஆகியோர் பெற்று கொண்டனர். ஐ.பி.எல்-ல் பங்கேற்க சென்றுள்ள ரோகித் சர்மா மற்றும் கொரோனா காரணமாக சிகிச்சையில் உள்ள வினேஷ் போகத் ஆகியோர் விருதுகளை பெறவில்லை.




