தேசிய ஆசிரியர் விருதை அறிவித்தது மத்திய கல்வி அமைச்சகம்; தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 ஆசிரியர்களுக்கு தேசிய ஆசிரியர் விருது அறிவித்து கவுரவிப்பு!
ஆசிரியராக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கி நாட்டின் ஜனாதிபதியாக உயர்ந்த தத்துவ மேதை டாக்டர்.சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5ம் தேதி நாட்டில் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. நடப்பாண்டுக்கான ஆசிரியர் தினம் இன்னும் சில தினங்களில் கொண்டாடப்படவுள்ள நிலையில் இன்று மத்திய கல்வி அமைச்சகம் தேசிய ஆசிரியர் விருது பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி நாடு முழுவதும் 45 ஆசிரியர்களுக்கு தேசிய ஆசிரியர் விருது மத்திய கல்வி அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் தமிழகத்தை சேர்ந்த இரண்டு ஆசிரியர்களும் இடம் பெற்றுள்ளனர். சென்னை மயிலாப்பூரில் சேர்ந்த பி.எஸ் சீனியர் செகண்டரி என்ற தனியார் பள்ளியின் ஆசிரியர் ரேவதி பரமேஸ்வரன் மற்றும் திருப்பூரில் உள்ள பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியர் விஜயலட்சுமி உள்ளிட்ட இருவருக்கு தேசிய ஆசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று தேசிய ஆசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு செப்டம்பர் 5ம் தேதி டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தேசிய ஆசிரியர் விருதை வழங்கி கௌரவிக்க உள்ளார்.




