பஞ்சாப் மாநில முதல்வர் சரண்ஜித்சிங் சன்னி உத்தரபிரதேசம் வர திட்டமிட்டுள்ளார் இதனால் அவரது ஹெலிகாப்டர் இறங்க அனுமதிக்க வேண்டும் என பஞ்சாப் அரசு சார்பில் உத்தரபிரதேச மாநில கூடுதல் தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
டெல்லி, உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் பகுதியில் ஏற்பட்ட வன்முறையில் 4 விவசாயிகள் உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்துள்ளனர். பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் பல்வேறு மாநில முதல்வர்களும் அந்த பகுதிக்கு செல்வதற்கு முயற்சி செய்ததை தொடர்ந்து உபி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இதற்கிடையில் பஞ்சாப் முதல்வர் லக்கிம்பூர் செல்ல திட்டமிட்டுள்ளார். எனவே அவரின் வருகையை அனுமதிக்க வேண்டும் என பஞ்சாப் அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பஞ்சாப் மாநிலத்தின் விமான போக்குவரத்து துறையின் இயக்குனர், உத்தரபிரதேச மாநிலம் கூடுதல் தலைமைச் செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் லக்கிம்பூர் பகுதியில் கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க விரும்புவதாகவும் இதற்காக பஞ்சாப் முதல்வர் ஹெலிகாப்டரில் தரையிறங்க அனுமதிக்க வேண்டும் என்றும் மேற்படி ஏற்பாடுகளையும் செய்து தர வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக உத்தரப்பிரதேசத்தின் லக்னோ உள்ளிட்ட முக்கிய விமான நிலையங்களுக்கு பஞ்சாப் சட்டீஸ்கர் உள்ளிட்ட மாநில முதல்வர்கள் வந்தால் அவர்களை அனுமதிக்க கூடாது என உத்தரப்பிரதேச அரசு கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.



