சென்னையில் வேலை தேடி அலைந்து வந்த அப்பாவி பொறியியல் பட்டதாரி இளம்பெண்ணை, பாலியல் தொழில் செய்ததாகக் கைது செய்து 13 நாள்கள் காப்பகத்தில் அடைத்து வைத்ததாகக் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், தாம் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். சென்னைக்கு வேலை தேடி வந்த அவர், தியாகராய நகரில் மசாயா ஸ்பா என்ற நிறுவனத்தில் ஆன்லைன் புரமோட்டராக, ஆன்லைனில் பணியாற்றியதாக கூறினார்.
அக்டோபர் 1ம் தேதி சம்பளம் வாங்க அலுவலகத்திற்கு நேரில் சென்றபோது, அந்த இளம்பெண்ணையும் பணியிலிருந்த 3 பெண்களையும் பாலியல் தொழில் செய்ததாகக் கூறி காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
ஆன்லைன் மூலம் நீதிபதி முன் ஆஜர்படுத்தியபோது தனது தரப்பில் விளக்கமே கேட்கப்படவில்லை என்றும், காவல் துறையும் நீதித்துறையும் தனக்கு அநீதி இழைத்து விட்டதாகவும் பாதிக்கப்பட்ட பெண் குற்றம்சாட்டினார். 13 நாள்கள் காப்பகத்தில் அடைத்து வைக்கப்பட்டு, தற்போது வழக்கிலிருந்து வெளிவந்திருப்பதாக அவர் கூறினார்.
தீர விசாரிக்காமல் தன்னைக் கைது செய்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு அந்த இளம்பெண் வலியுறுத்தினார்.