திருத்தணியில் உள்ள முருகன் கோவிலில் உள்ள சிசிடிவி கேமராவை அங்கவஸ்திரம் கொண்டு மறைத்த 2 அர்ச்சகர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரைத்துள்ளதாகவும் பணியிட மாறுதல் செய்து இந்து சமய அறநிலைய துறை நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
முருகனின் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவில் திகழ்கிறது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தணி முருகன் கோவிலுக்கு வந்து வழிபாடு செய்வது வழக்கம். இந்நிலையில், கோவிலில் உண்டியலுக்கு நேராக இருந்த சிசிடிவி கேமராக்களை அர்ச்சகர் ஒருவரின் கட்டளையின் கீழ் மற்றொரு அர்ச்சகர் அங்கவஸ்திரம் கொண்டு மறைப்பது போன்ற காட்சிகள் சிசிடிவியில் பதிவாகி இருந்தது அந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியானது.
இந்த விவகாரம் தொடர்பாக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஊடகங்களுக்கு அளித்துள்ள பேட்டியில் இந்த விவகாரத்தில் சிக்கிய அர்ச்சகர்கள் இருவரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், “இந்த விவகாரத்தில் இருவரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது விரைந்து துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது இந்த விவகாரம் விசாரணையில் இருப்பதால் பணியிட மாற்றம் மட்டுமே செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில் தவறு உறுதி செய்யப்பட்ட பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் ” என்று அமைச்சர் சேகர் பாபு உறுதி தெரிவித்துள்ளார்.