நீர்நிலை ஆக்கிரமிப்புகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், மழை வெள்ளம், அதிகாரிகளுக்கு மீண்டும் பாடம் கற்பித்துள்ளது என்று கருத்து தெரிவித்துள்ளது.
அரியலூர் மாவட்டம் பெரிய திருக்கோணம் பகுதியில் உள்ள ஏரியில் மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்பை அகற்றக் கோரிய வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, சென்னை உட்பட அனைத்துப் பகுதிகளிலும் நீர்நிலைக ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.
நீர் வழிப்பாதைகளில் எந்த தடையும் இருக்கக்கூடாது எனவும், அதிக மழை பெய்தால் விரைவில் வெள்ளம் வடியும் வகையில் நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என்றும் தெரிவித்த நீதிபதிகள், பாதி நாட்கள் தண்ணீருக்காகவும், மீதி நாட்கள் தண்ணீரிலும் இறப்பதாக வேதனை தெரிவித்தனர்.
இந்த மழை வெள்ளம் அதிகாரிகளுக்கு நல்ல பாடத்தைக் கற்றுக்கொடுத்துள்ளது எனத் தெரிவித்த நீதிபதிகள், கோரிக்கை தொடர்பாக மீண்டும் மனு அளிக்க மனுதாரருக்கு அறிவுரை வழங்கியதுடன் அந்த மனு மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.