மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் வெளிநாடுவாழ் இந்தியர்களை வாக்களிக்க வைக்க தயார் என, இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் உள்ளிட்ட மாநில சட்டப்பேரவை தேர்தல்களில், வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களை வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. இதற்காக பல்வேறு வகையான ஆலோசனைகளை மத்திய சட்ட அமைச்சகமும், இந்திய தலைமை தேர்தல் ஆணையமும் நடத்தி வந்தன. இதுதொடர்பாகவும், இந்திய தேர்தல்களை நடத்துவது தொடர்பாகவும் புதிய சட்டம் கொண்டு வருவதற்காக, மத்திய சட்ட அமைச்சகம் முயற்சிகளை முன்னெடுத்துள்ளது.
இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையத்தின் நிலைப்பாடு பற்றி தெரிந்து கொள்ள, வெளிநாடுவாழ் இந்தியர்களை வாக்களிக்க வகைசெய்ய இயலுமா என மத்திய சட்ட அமைச்சகம் கேள்வி எழுப்பியது.

இதற்கு பதில் அளித்ததுள்ள தேர்தல் ஆணையம்,வெளிநாடுவாழ் இந்தியர்களை இந்திய தேர்தல்களில் வாக்களிக்க வைப்பது சாத்தியம் தான், அதற்கான வழிமுறைகள் தங்களிடம் உள்ளது என தெரிவித்துள்ளது. வருகிற தமிழக சட்டமன்ற தேர்தலிலேயே அதனை அமல்படுத்த தயாராக இருக்கிறோம். தமிழகத்துடன் கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கும் இதனை செயல்படுத்த தயராக உள்ளோம் எனவும் தெரிவித்துள்ளது. ஆன்லைன் மூலம் இது சாத்தியமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




