அடுத்த 2 நாள்களுக்கு தமிழக கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் கடலோர மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் அதிக கன மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. உடன் நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என்றும், புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி வரும் 29-ஆம் தேதி தெற்கு அந்தமான் அருகே உருவாகும் என்றும் வானிலை மையம் கணித்து தகவல் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தின் வானிலை நிலவரம் தொடர்பாக தென்மண்டல வானிலை மைய தலைவர் பாலச்சந்திரன் பேசுகையில், “கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதி கனமழை 3 இடங்களிலும், கன முதல் மிக கனமழை 4 இடங்களிலும், 70 இடங்களில் கனமழையும் பெய்துள்ளது. அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 31 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்துக்கு நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்; சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை, தென்காசி, தேனி, திண்டுக்கல், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை – காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் கனமழையும்; பிற இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
நாளை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தூத்துக்குடி, தென்காசி ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும்; கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருச்சி, கரூர், நீலகிரி, கோவையில் ஒரு சில இடங்களில் கனமழையும்; பிற மாவட்டங்கள், புதுவை காரைக்கால் பகுதியில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை மற்றும் கடலூரில் அதி கன மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.