செம்மர கடத்தல் கும்பல் தலைவன் கோவையில் சிக்கினான், அவரை ஆந்திரா போலீஸ் மடக்கி பிடித்துள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூர், கடப்பா, நெல்லூர் ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் செம்மரங்கள் உள்ளது. இந்த செம்மரங்களை வெட்டி கடத்துவதற்காக கடத்தல்காரர்கள் தமிழகத்தில் உள்ள மலை கிராமங்களை சேர்ந்த கூலித்தொழிலாளர்களுக்கு பணத்தாசை காண்பித்து அடர்ந்த வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி கடத்துகின்றனர். அதன்படி கடத்தி ஆனதும், காடுகளின் வெளியே அந்த மரங்களை கொண்டு வரும்போது கோவையை சேர்ந்த கடத்தல் கும்பலின் தலைவன் பாஷா என்பவர் கூலியாட்களை தாக்கிவிட்டு செம்மரக்கட்டைகளை கடத்திச்செல்வதாக கூறப்படுகிறது.
இதேபோல், கடந்த திங்கட்கிழமையன்று கடப்பா மாவட்டம், ராயசோட்டியிலிருந்து தமிழ்நாடு சேலம் மற்றும் கள்ளக்குறிச்சியை சேர்ந்த மணி உள்ளிட்ட 7 கூலித்தொழிலாளர்கள் செம்மரக்கட்டைகளுடன் காரில் திரும்பியபோது, பாஷாவின் கூட்டாளிகள் இவர்களை பின் தொடர்ந்து உள்ளனர். இதனால் அந்த கார் கட்டுப்பாட்டை இழந்து டிப்பர் லாரியின் டீசல் டேங்கரில் மோதி விபத்துக்குள்ளானது. அதில் பயணம் செய்தவர்கள் சேலத்தை சேர்ந்த 5 பேர் காரில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். பாஷாவின் கூட்டாளிகள் லேசான காயங்களுடன் தப்பினர்.
மேலும் குற்றவாளிகளை பிடிக்க கடப்பா எஸ்.பி. அன்புராஜன் தலைமையிலான போலீசார் நேற்று கோவை வந்தனர். அதனை தொடர்ந்து காவேரி நகரை சேர்ந்த ஹக்கீம் என்கிற பாஷா எனபவரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.