ராஜஸ்தான் அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக சச்சின் பைலட் காங்கிரஸ் இடைகால தலைவர் சோனியா காந்தி உடன் டெல்லியில் ஆலோசனை நடத்துகிறார்.

டெல்லி,
ராஜஸ்தான் அமைச்சரவை மாற்றம் தொடர்பாக இறுதி முடிவுகள் எடுக்க காங்கிரஸ் கட்சியின் தலைமை தயாராகி வருகிறது. நேற்றைய தினம் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை சந்தித்த நிலையில் இன்று காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட் காங்கிரஸ் சோனியா காந்தியை சந்திக்க உள்ளார்.
டெல்லியில் நடைபெறவுள்ள இந்த சந்திப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், நேற்றைய தினம் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் டெல்லியில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியுடன் நீண்ட நேர ஆலோசனை நடத்திய நிலையில் அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக தலைமையே முடிவு செய்யும் என தெரிவித்திருந்தார்.இந்நிலையில் இன்று சச்சின் பைலட் சோனியா காந்தியுடன் சந்திப்பு என்பது முக்கியத்துவம் பெறுகிறது;
நேற்றைய தினம் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே சி வேணுகோபால் சந்தித்த சச்சின் பைலட் அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக நீண்ட நேரம் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு உழைத்தவர்களுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்க வேண்டும் என சச்சின் பைலட் தரப்பு அழுத்தம் கொடுப்பதாக தகவல்கள் கூறுகிறது.
இன்றைய சந்திப்பின்போது அமைச்சரவை விரிவாக்கம் என்பது அடுத்து வரக்கூடிய ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு கூட்டணி கட்சிகள் மற்றும் அதிருப்தியில் உள்ள சிலருக்கும் அமைச்சரவையில் இடம் கொடுக்க சச்சின் பைலட் கேட்டு கொள்வார் என கூறப்படுகிறது. டெல்லி பயணத்துக்கு முன்னதாக சச்சின் பைலட் ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் ஒரு ஆலோசனை நடத்தியதாகவும் சச்சின் பைலட் தரப்பிலிருந்து அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக ஒரு சில பெயர்கள் பரிந்துரை செய்யப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது.
மேலும், அடுத்தவருடம் தொடக்கத்தில் நடைபெற்றவுள்ள உத்தரபிரதேச மாநிலத்தின் தேர்தல் பொறுப்பாளராக சச்சின் பைலட் மற்றும் சட்டீஸ்கர் முதலமைச்சர் பூபேஸ் பகேல் உள்ள நிலையில் இருவரும் இன்று சோனியாகாந்தியை சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.