சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிக்கையில் காவலர்கள், மருத்துவர்கள் உள்பட 105 சாட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த மொபைல் வியாபாரிகளான ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும் சாத்தான்குளம் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து சென்று தாக்கப்பட்டு உழறிழந்தனர்.
இதுபற்றி, மதுரை ஐகோர்ட்டு அளித்த உத்தரவின் பெயரில் விசாரணை நடத்திய சி.பி.சி.ஐ.டி. போலீசார், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 10 காவலர்களை கைது செய்து அவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்தனர். இதை தொடர்ந்து தற்போது இந்த வழக்கை சி.பி.ஐ கள் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் கைதான போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பால்துரை கொரோனாவால் இறந்ததால், மற்ற 9 பேர் மீதான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் அவ்வப்போது சாத்தான்குளத்துக்கும், கோவில்பட்டிக்கும் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது அவர்கள் இந்த கொலை வழக்கில் ஈடுபட்ட காவலர்கள், மருத்துவர்கள் உள்பட 105 சாட்சிகள் சேர்த்துள்ளனர்.
சாத்தான்குளம் காவல்நிலைய தலைமை காவலர் பியூலா, ரேவதி உள்ளிட்ட 6 போலீசார் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் கோவில்பட்டி கிளை சிறை கண்காணிப்பாளர், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோரும் இதில் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். மாஜிஸ்திரேட் விசாரணை அறிக்கை, தடயவியல் ஆய்வு மைய அறிக்கையும் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளது.