தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவசாயி அம்மாள் சேலத்தில் காலமானார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவசாயி அம்மாள் வயோதிகம் காரணமாக ஏற்பட்ட உடல் நலக்குறைவினால் கடந்த சில நாட்களாக சேலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவசாயி அம்மாள் சிகிச்சை பலனின்றி சேலம் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 93. முதல்வர் பழனிசாமியின் தாயார் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்து, அம்மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை தொடங்கி வைத்து, புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டச் சென்ற முதல்வர் பழனிசாமி தனது தாயாரின் மறிவு செய்தி கேட்டு சாலை மார்க்கமாக சேலம் விரைந்துள்ளார்.
முதலமைச்சராக மகன் பதவி ஏற்ற போது இவ்வாறு கூறியிருந்தார்:
“பழனிச்சாமி தமிழக மக்களால் நேசிக்கப்பட்ட எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் காட்டிய நல்வழிப் படி நடந்து ஏழை, எளிய மக்கள் பாராட்டும் விதத்தில் பழனிச்சாமி நல்லாட்சி புரிவான். இதில் எனக்கு துளி அளவும் ஐயம் இல்லை.
ஏழை, எளிய விவசாய மக்கள் படும் பல்வேறு சிரமங்களை நன்கு உணர்ந்து அனைத்து தரப்பு மக்களும் பாராட்டும் விதமாக செயல் படுவான். அதற்கு இறைவன் அருள் புரிவார் என்று நம்பிக்கையில் நானும் வாழ்த்துகிறேன்.”
தீவிரமான அரசியல் பணிகளில் ஈடுபட்டிருந்த போதும், அவ்வப்போது சொந்த கிராமத்திற்கு சென்று தனது தாயாரை அக்கறையுடன் பார்த்துக் கொண்ட எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிரோம்.