தற்கொலைகளில் தமிழ்நாடு இரண்டாவது இடம். தற்கொலைகளில் முன்னுக்கும் நிற்கும் தமிழ்நாடு.

டெல்லி: 2019ஆம் ஆண்டில் நாள் ஒன்றுக்கு இந்தியாவில் 381 பேர் தற்கொலை செய்து கொண்டு இருப்பது தேசிய குற்ற ஆவண மையம் வெளியிட்டு இருக்கும் தகவலில் தெரிய வந்துள்ளது. நாட்டிலேயே தற்கொலை செய்து கொண்டவர்கள் பட்டியலில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது.
தேசிய குற்ற ஆவண மையம் கடந்த 2019ஆம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. அந்த ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் மொத்தம் 1,39,123 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதற்கு முந்தைய 2018ஆம் ஆண்டில் 1,34,516 பேரும், 2017ஆம் ஆண்டில் 1,29,887 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த இரண்டு ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் கடந்தாண்டு தற்கொலை செய்து கொண்டவர்களின் சதவீதம் 3.4 சதவீதம் அதிகரித்துள்ளது.
குடும்ப பிரச்சனைகளால் 32.4 சதவீதம் பேரும், திருமண சிக்கல்கள் காரணமாக 5.5 சதவீதம் பேரும், உடல்நலக் கோளாறு காரணமாக 17.1 சதவீதம் பேரும், இந்த வகையில் மொத்தம் 55 சதவீதம் பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தற்கொலை செய்து கொண்ட 100 பேரில் 70.2 சதவீதம் பேர் ஆண்கள், 29.8 சதவீதம் பேர் பெண்கள் என்பது தெரிய வந்துள்ளது. தற்கொலை செய்து கொண்ட ஆண்களில் 68.4 சதவீதம் பேர் திருமணமானவர்கள். தற்கொலை செய்து கொண்ட பெண்களில் 62.5 சதவீதம் பேர் திருமணமானவர்கள்.
நாட்டிலேயே மகாராஷ்டிராவில் 18,916, தமிழ்நாட்டில் 13,493, மேற்குவங்கத்தில் 12,665, மத்தியப்பிரதேசத்தில் 12,457, கர்நாடகாவில் 11,288 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் 3.9 சதவீதம் பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தான் அதிகளவில் குடும்ப தற்கொலைகள் நடந்து இருப்பதாக தெரிய வந்துள்ளது.




