அமர்நாத் யாத்திரையை குறிவைக்க பயங்கரவாதிகள் திட்டமிட்டதற்கான அறிகுறி இருப்பதாக இந்திய ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள நாகநாத் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படைக்கு தகவல் கிடைத்தது. இந்நிலையில், தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பாதுகாப்பு படைக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் உண்டானது. அப்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப் பட்டனர். இதில் ஒரு பாதுகாப்பு படை வீரர் காயடைந்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து, அமர்நாத் யாத்திரையை குறிவைத்து தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக இன்று இந்திய ராணுவம் தகவல் தெரிவித்தது. இது தொடர்பாக பேசிய ராஷ்டிரிய ரைபிள்ஸ் துறை தளபதி பிரிகேடியர் வி.எஸ் தாகூர், காஷ்மீர் பள்ளத்தாக்கில் அமர்நாத் யாத்திரையை குறிவைத்து, தாக்க பயங்கரவாதிகள் திட்டமிட்டதாக தெரிவித்தார்.
உறுதிபடுத்தப்பட்ட உளவுதுறை தகவல்களை ராணுவம் பெற்று வருகிறது. இது போன்ற எந்தவொரு வடிவமைப்பையும் தோல்வியடையச் செய்யும் பணியையும், யாத்திரை தடையின்றி அமைதியாக நடப்பதை உறுதி செய்ய ராணுவ பாதுகாப்பு படையினர் பொறுப்பேற்று உள்ளனர்.
அனைத்து பயங்கரவாத அமைப்புகளின் தீங்கு விளைவிக்கும் நடவடிக்கைகள் தோல்வியடையும். பள்ளத்தாக்கில் அமைதியை சீர்குலைக்க யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். காஷ்மீரில் உள்ள அமர்நாத் யாத்திரை பொதுவாக 43 நாட்கள் வரை இருக்கும். ஆனால் தொற்றை கருத்திற்கொண்டு, இந்த ஆண்டு 15 நாட்களுக்கு இருக்கும். இந்த முறை குறுகிய பால்தால் பாதை (மத்திய காஷ்மீர்) வழியாக மட்டுமே யாத்திரை அனுமதிக்கப்படும். மேலும் இந்த ஆண்டு யாத்திரையை பாரம்பரிய பஹல்காம் – சந்தன்வாரி பாதையில் எந்த யாத்ரீகரும் மேற்கொள்ள அனுமதிக்க மாட்டார்கள்.
கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக யாத்திரை சமூக இடைவெளியுடன் கடைபிடிக்க வலியுறுத்தப்படுகிறது. இது தொடர்பாக அமர்நாத் சன்னதி வாரியம் அனைத்து சாத்தியங்களையும் கவனத்தில் கொள்ளும். 370 மற்றும் 35 ஏ பிரிவுகளை ரத்து செய்த பின்னர் இந்த ஆண்டு இது முதல் புனித அமர்நாத் யாத்திரையாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.