மத்திய பிரதேச மாநிலத்தில் பிரத்யுமன் சிங் லோதி என்ற எம்.எல்.ஏ. ராஜினாமா செய்துள்ள நிலையில், மேலும் ஒரு எம்.எல்.ஏ. ராஜினாமா செய்துள்ளார்.
230 சட்டசபை தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வந்தது. காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஜோதிராதித்ய சிந்தியா 22 எம்.எல்.ஏ.-க்களுடன் கட்சியில் இருந்து வெளியேறினார்.
அந்த 22 எம்.எல்.ஏ.-க்களும் ராஜினாமா செய்ததால் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. பின்னர் 107 இடங்களை வைத்துள்ள பா.ஜனதா ஆட்சியை கைப்பற்றியது. சிவ்ராஜ் சிங் சவுகான் முதல்வராக உள்ளார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பா.ஜனதா தலைவருக்கு மிகவும் நெருக்கமாக கருதப்படுபவராக கூறப்படும் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரத்யுமன் சிங் லோதி தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் பாதா-பல்ஹேரா தொகுதியில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள்.
எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த சில மணி நேரங்களில் மாநில சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் தலைவராக நியமிக்கப்பட்டார். இது கேபினட் அமைச்சர் பதவிக்கு சமமானது.
இந்நிலையில் நேபாநகர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் எம்.எல்.ஏ. சுமித்ரா தேவி கஸ்தேகர் ராஜினாமா செய்துள்ளார்.
‘‘ராஜினாமா முடிவு குறித்து நன்றாக யோசித்து முடிவு எடுக்க நேரம் கொடுக்கப்பட்டது, ஆனாலும் அவர் உறுதியாக இருந்ததால் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டேன்’’ என்று சபாநாயகர் தெரிவித்துள்ளார். இதனால் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் பலம் 90 ஆக குறைந்துள்ளது. ஏற்கனவே இரண்டு பேர் உயிரிழந்துள்ளதால் சட்டசபையில் எம்.எல்.ஏ.-க்களின் எண்ணிக்கை 204 ஆக குறைந்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒரு இடமும், சமாஜ்வாடி கட்சிக்கு ஒரு இடமும், நான்கு சுயேட்சை எம்.எல்.ஏ.-க்களும் உள்ளனர்.